ARTICLE AD BOX
தமிழ்த் திரையுலகில் முக்கியமான நடிகராக இருந்துவரும் சிலம்பரசன், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளை கொண்டவராக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். திரைப்பயணத்தில் ஆரம்பத்தில் அசுர வளர்ச்சியை கொண்டிருந்த சிம்பு, இடையில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தார்.
படம் ஓடவில்லை, உடல்பருமன் முதலிய பிரச்னைகளால் இனி அவ்வளவு தான் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் கம்பேக் கொடுத்த சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய 50வது திரைப்படத்தின் அறிவிப்பை உறுதிசெய்துள்ள சிலம்பரசன், 50வது படத்திற்கு அவரே தயாரிப்பாளராக மாறவிருப்பதாக அறிவித்துள்ளார்.
50வது படத்திற்கான அறிவிப்பை உறுதிசெய்த சிம்பு!
பிப்ரவரி 3-ம் தேதியான இன்று தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பு, 50வது திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ள நிலையில், இந்த படத்தின் மூலம் சிலம்பரசன் தயாரிப்பாளராக மாறவுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சிம்பு, “இறைவனுக்கு நன்றி! Atman சினி ஆர்ட்ஸ் மூலமாக தயாரிப்பாளராக ஒரு புதிய பயணத்தில் நான் அடியெடுத்து வைக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் தேசிங்கு பெரியசாமிக்கும் ட்ரீம் ப்ராஜக்டாக உள்ள படத்தை எனது 50-வது படமாக தொடங்குவதை விட வேறு எதுவும் சிறந்தது இல்லை. எங்கள் நெஞ்சோடு கலந்த இந்தப் புதிய முயற்சியை ஆவலோடு எதிர்நோக்கி உற்சாகமாக இருக்கிறேன். எப்போதும் போல உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்! நீங்க இல்லாமல் நான் இல்ல!” என சிம்பு தெரிவித்துள்ளார்.
சிலம்பரசன் தன்னுடைய 47வது படமாக தக் லைஃப், 48வது படமாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும், 49வது படமாக `பார்க்கிங்' பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்திலும் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.