ARTICLE AD BOX
தமிழ் vs இந்தி.. அர்த்தமில்லாமல் பேசிய பவன் கல்யாண்.. வெச்சு விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
ஹைதராபாத்: தமிழ்நாட்டில் என்றைக்குமே ஒரு மொழியை திணிப்பதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. அது சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்து இப்போது வரை நீடித்து வருகிறது. அந்த வகையில், இந்திய மாநிலங்களிலேயே, தமிழ்நாடு மட்டும் தான் மொழிப்போர் சந்தித்தது. அப்படி இருக்கும்போது, இன்றைக்கும் இந்தி திணிப்புக்கு எதிரான குரல் என்பது இருந்து வருகிறது. தற்போதைய ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை குறித்து விமர்சித்துள்ளார். அதற்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார்.
பவன் கல்யாண் நடிகராக இருந்த வரை, அவரது சினிமாக்களை பலரும் கொண்டாடினார்கள். தமிழ்நாட்டில் அவரது சினிமாவிற்கு என கனிசமான மார்க்கெட் என்பது இருந்தது. பவன் கல்யாண் அரசியலில் களமிறங்கிய பின்னர் அவரது படங்கள் பல ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் அவர் எப்போது ஆந்திராவின் துணை முதலமைச்சர் ஆனாரோ, அதில் இருந்து பவன் கல்யாண் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
பவன் கல்யாண் ஜன சேனா பார்ட்டி என்ற கட்சியை நடத்துகிறார். ஆனால் பவன் கல்யாண் துணை முதலமைச்சர் ஆன பின்னர், முழுக்க முழுக்க பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் போல் நடந்து கொள்கிறார் என்கிற விமர்சனம் அரசியல் தளத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று பேசியுள்ளார் பவன் கல்யாண். அதாவது அவரது கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ் சினிமா குறித்து, தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பவன் கல்யாண்: அதாவது அவரது பேச்சில், " தென்னிந்தியாவில் இந்தி மொழியை திணிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அனைத்து மொழிகளும் நமது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். தமிழ்நாடு தொடர்ந்து இந்தியை எதிர்க்கிறது. தமிழர்களுக்கு இந்தி மொழி தேவையில்லை என்று சொல்கிறார்கள். இந்தியை வேண்டாம் எனக் கூறும் தமிழர்கள், ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? படத்தை இந்தியில் டப் செய்து, பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து பணம் வந்தால் மட்டும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள்.
இந்தி: தமிழ்நாடு இந்தி பேசும் பீகாரிலிருந்து வரும் தொழிலாளர்களை நம்பி உள்ளது. இப்படி பல காரணங்கள் இருந்தும் இருந்தும் இந்தியை வெறுக்கிறோம், எதிர்க்கிறோம் எனச் சொல்கிறார்கள்.தமிழ்நாடு இப்படி கூறுவது எப்படி நியாயமானதாக இருக்கும். நமது இந்தியா என்பது கோபப்படும்போது வெட்டி பிரித்துக் கொள்ளக் கூடிய கேக் துண்டா? நமது நாட்டின் ஒருமைப்பாட்டை குறைக்க முயற்சிப்பவர்களை எதிர்க்க என்னைப் போன்ற கோடிக்கணக்கானோர் ஒன்றாக இணைந்து நிற்போம்" என பேசியிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன்: இவரது பேச்சு, தமிழ்நாடு அரசின் மொழிக்கொள்கை குறித்து துளியும் புரிதல் இல்லாத தன்மையாக இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து பலரும் பவன் கல்யாணுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது இதுதான். மூன்றாம் மொழிகள் பல இருக்க .. ஹிந்தி ஹிந்தி என மந்திரம் ஓதுவதற்கு பெயர்தான் ஹிந்தி திணிப்பு. எஜமான விஸ்வாசத்தை உங்கள் மாநிலத்தோடு வைத்துக்கொள்ளுங்கள்" என சாட்டையைச் சுழற்றியது போல் பதிலடி கொடுத்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
