ARTICLE AD BOX
மத்திய அரசு தமிழகத்துக்குத் தரவேண்டிய கல்வி நிதியைத் தராமல் இழுத்தடிக்கும் நிலையில், மாநிலத்தின் வரி உரிமையைக் காப்போம் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், குடிமைச்சமூகப் பிரதிநிதிகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன், மேற்குவங்க முன்னாள் கூடுதல் தலைமைச்செயலாளர் கோ. பாலச்சந்திரன், சட்டமன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வி.சி.க. சிந்தனைச்செல்வன், த.வா.க. வேல்முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, முருகவேல்ராஜன், தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், கல்வியாளர்கள் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பிரபா கல்விமணி, அ.மார்க்ஸ், பேரா. அ.சிவக்குமார், பேரா. மு.திருமாவளவன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, மு. தேன்மொழி, பேரா. இரா.முரளி, எழுத்தாளர்கள் ஜமாலன், கோச்சடை, யமுனா ராஜேந்திரன், ப. திருமாவேலன், கவிஞர் சுகிர்தராணி உட்பட 75 பேர் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த அறிக்கை விவரம்:
பிஎம்சிறீ பள்ளி திட்டம் தொடர்பாக, தமிழ்நாட்டு அரசியல் சூழலில் எழுந்துள்ள விவாதம் குறித்து, சில விளக்கங்களை இந்தக கூட்டறிக்கையின் வாயிலாக முன்வைக்கிறோம்.
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறைக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய ரூ. 2,152 கோடியை, ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குத் தராமல், வேறு சில மாநிலங்களுக்குக் கொடுத்திருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு, பிஎம்சிறீ திட்டத்தைத் தமிழ்நாடு ஏற்காததே காரணம் என ஒன்றிய அரசின் தரப்பினால் கூறப்படுகிறது.
முதலில் இங்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது, ஒன்றிய அரசினால் தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய நிதி, சமக்ர சிக்சா அபியான் எனும் பள்ளிக்கல்வித் திட்டத்தின்படி கொடுக்கப்பட்டிருக்க வேண்டியதே; பிஎம்சிறீ திட்டத்தின் கீழ் அல்ல.
ஆனால், மறைமுக இந்தித் திணிப்பிற்கு ஆதரவான மும்மொழிக் கொள்கை மற்றும் பிற புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை வலியுறுத்தும் பொருட்டு பிஎம்சிறீ திட்ட ஏற்பை முன் நிபந்தனையாக வைக்கிறார்கள். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விக் கட்டமைப்பு, ஆசிரியர்களின் ஊதிய செலவுகளுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய சமக்ர சிக்சா அபியான் திட்டத்திற்கான நிதி மறுக்கப்பட்டிருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பொதுப் பட்டியலில் உள்ள ஒரு துறையின் கீழ் ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாகக கொள்கைகளை வகுத்துத் திணிப்பதும், அதனை மாநில அரசுகள் ஏற்றே ஆகவேண்டுமென நிபந்தனை விதிப்பதும் அரசமைப்புச் சட்டத்திற்கும் கூட்டாட்சி அமைப்புக்கும் விரோதமானது.
இட ஒதுக்கீட்டு உரிமை, நீட் எதிர்ப்பு போன்ற கல்வி உரிமைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கிற தமிழ்நாடு, பிஎம்சிறீ திட்டத்திற்கும் வலுவான எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறது. கல்வி உரிமை கடந்து, சமக்ர சிக்சா அபியான் கல்வித் திட்ட நிதி ஒதுக்கீடுக்கு புது நிபந்தனை வைக்கும் போக்கை ஆழமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பள்ளிக் கல்வியில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் வேறு சில சமூகநலத் திட்டங்களுக்கான நிதிப் பங்கீட்டிற்கும் ஒன்றிய அரசு 'மாநில உரிமைக்கு, மாநில நலனுக்கு விரோதமாக' நிபந்தனைகளை முன்வைக்கிறது. தமிழ்நாட்டின் வரிப் பணத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய பங்கைத் தருவதில், தமிழ்நாட்டிற்கு விரோதமாக ஒன்றிய அரசு கையாளக் காரணமான மத்திய பங்களிப்புத் திட்டங்களைப் பற்றி தமிழ்நாட்டு அளவில் விவாதிக்கப்பட வேண்டும் என விழைகிறோம்.
இந்திய அரசமைப்புச் சட்டமானது ஒன்றிய- மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சி அமைப்பின் நிதி உறவுகளை வரையறுத்துள்ளது. வரி வருவாய் வரவினங்கள் ஒன்றிய அரசிடம் அதிகமாக இருக்க, மாநில அரசுகளிடத்திலோ மக்கள் நலச் செலவினங்களின் பொறுப்பு மிகுந்திருப்பதன் அடிப்படையில், ஒன்றிய அரசின் வரி வருவாயின் குறிப்பிட்ட பங்கை மாநிலங்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் ஏற்பாடு உள்ளது.
அரசமைப்புப் பிரிவுகள் 270(1), 275(1), 282
ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு நிதிவழங்குவது, பெரும்பாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 270(1), 275(1), 282 ஆகியவற்றின்படி கையாளப்படுகிறது.
இதில் பிரிவுகள் 270 (1), 275 (1) ஆகியவை ஒன்றிய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு நிதி ஆணையம் மூலமான நிதிப் பங்கீட்டை வரையறுத்துள்ளன. இதன்படி ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பங்கீடு பெரும்பாலும் நிபந்தனைகள் அற்றவை (Untied). சில மானியங்களுக்கு நிதி ஆணையம் நிபந்தனைகளை வகுக்கிறது.
பிரிவு 282 ஆனது, ஒன்றிய அரசோ மாநில அரசோ தனது வருவாயிலிருந்து பொது விவகாரச் செலவுகளுக்குப் பங்களிப்பது தொடர்பானது. திரட்டப்பட்ட வரியிலிருந்து ஒவ்வொரு மாநில மக்களுக்குமான மக்கள்நலத் துறைகளுக்குச் செலவுசெய்ய வேண்டிய கடப்பாடுடைய ஒன்றிய அரசு, இந்தப் பிரிவு மூலம் மத்திய பங்களிப்புத் திட்டங்களின் (Centrally sponsored scheme) வழியாக மாநில அரசுகளுக்கு நிதி வழங்குகிறது. மத்திய பங்களிப்புத் திட்டத்தின் வழியாகத் தரப்படும் நிதி, நிபந்தனைகளின் கீழான (Tied Grants) நிதியாகும்.
ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்குப் பங்கிடப்படும் ஒட்டுமொத்த நிதி அளவில் 40 சதவீதம் நிபந்தனைகளின் கீழான நிதியாகக் கொடுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மத்திய பங்களிப்புத் திட்டங்களின் வழியாகவே வழங்கப்படுகிறது.
மேல் வரி, கூடுதல் வரி ஒன்றிய அரசானது மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்குச் செலவிடும் நிதியை, மேல், கூடுதல் வரிகளின் (Cess & Surcharges) வருமானத்தின் மூலமே செய்கிறது. நடைமுறையில் விதிக்கப்படும் வரிகளின் மீது மற்றொரு வரியாக, கூடுதலாக குறிப்பிட்ட தேவைகளுக்காக விதிக்கப்படும் வரிகள் மேல் மற்றும் கூடுதல் வரிகள் ஆகும். அதாவது, வரிகளின் மீது விதிக்கப்படும் வரி.
மேல்வரியானது குறிப்பிட்ட தேவைக்காக, குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டும் நேரடி வரிகளான வருமான வரி, கார்ப்பரேட் வரிகளின் மீதான மற்றொரு வரியாக விதிக்கப்படுவது. அந்த குறிப்பிட்ட கால தேவை முடிந்தவுடன் அவை வசூலிக்கப்படுவதில்லை. பொது சுகாதாரம், கல்விக் கட்டமைப்புகளுக்குச் செலவிடுவதற்காக பொது சுகாதார- கல்வி மேல்வரி (Health & Education Cess), வசூலிக்கப்படும் நேரடி வரி அளவின் மீது 4 சதவீதம் விதிக்கப்படுகிறது. ஒருவர் வருமான வரியாக ரூ.100 செலுத்தினால் அதன் மீதான பொது சுகாதார- கல்வி மேல்வரியாக, மேலும் ரூ. 4 வசூலிக்கப்படும்.
ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான வருமானம் ஈட்டுவோரிடம் கூடுதல் வரி (Surcharges) விதிக்கப்படுகிறத. ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையோர் கட்டுகிற வருமானவரியின் அளவில் மேலும் கூடுதலாக 10 சதவீத கூடுதல் வரி (Surcharge) வசூலிக்கப்படுகிறது; ஒரு கோடிக்கும் அதிகமான வருமானம் என்றால் அதற்கான வருமான வரி அளவில் 15 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும்.
ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும் மேல், கூடுதல் வரிகள் இந்திய ஒருங்கிணைந்த நிதிக்குள் (Consolidate fund of India) சேர்க்கப்படும். சம்பந்தப்பட்ட துறைகளின் வழியாக அவை செலவிடப்படும். ஒன்றிய அரசால் திரட்டப்பட்ட பொதுசுகாதார - கல்வி மேல்வரியே சமக்ர சிக்சா அபியான் போன்ற மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்தால் செலவிடப்படுகிறது.
பகிர்வு அல்லாத வரி 133% அதிகரிப்பு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஒன்றிய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க அவசியமில்லாத, வரிப் பகிர்வுத் தொகுப்பிற்குள் வராத மேல், கூடுதல் வரிகளின் வீதத்தைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. மோடி அரசின் காலத்தில் மேல், கூடுதல் வரியின் அளவு சுமார் 133 சதவீத அளவு உயர்ந்திருக்கிறது.
ஒன்றிய அரசின் வரி வருவாய் 100 ரூபாய் எனில் அதில் மேல், கூடுதல் வரியின் அளவு 10 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. மோடி அரசின் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் இதன் பங்கு என்பது 4 முதல் 5 ரூபாய் அளவிலேதான் இருந்தது.
இதன் காரணமாக ஒன்றிய அரசின் 100 ரூபாய் வரிவருவாயில் 90 ரூபாய்க்கும் குறைவாகவே வரிப்பகிர்வு தொகுப்பிற்குள் இடம்பெறுகிறது. 15ஆவது நிதி ஆணையப் பரிந்துரையின்படி 90 ரூபாயிலிருந்து 41 சதவீதமான 36~37 ரூபாய் அளவிலே மாநிலங்களுடன் பகிரப்படுகிறது.
மோடி அரசின் ஆட்சிக்காலத்திற்கு முன்னர் இருந்ததைப்போல, மேல் - கூடுதல் வரியின் அளவு 4~5 ரூபாய் அளவிலே இருப்பின், ஒன்றிய அரசின் வரிப்பகிர்வுத் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு 40~41 ரூபாய் கிடைத்திருக்கும். நிதி ஆணையம் வழியே கிடைக்கப்பெறும் இந்த நிதிப் பங்கீட்டை மாநில அரசுகள் தங்கள் தேவை, விருப்பத்திற்கு ஏற்றாற்போல மாநில மக்களுக்குச் செலவுசெய்திருக்க முடியும்.
எதேச்சதிகாரம் எப்படி? ஆனால் மேல், கூடுதல் வரிகளின் அளவை உயர்த்தி, அவற்றை மத்திய பங்களிப்புத் திட்டத்தின் வழியாக மாநிலங்களுக்குப் பங்கிடுவதன் மூலம், மாநிலங்கள் எவ்வாறு செலவுசெய்ய வேண்டும் என நிபந்தனைகளை விதித்து, ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாக நடந்துகொள்கிறது.
(ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும் மேல், கூடுதல் வரிகள், அவை வசூலிக்கப்பட்ட குறிப்பிட்ட நோக்கத்திற்காக இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து எடுத்து, செலவு செய்யாமல், ஒன்றிய அரசின் கருவூலத்திற்குக் கொண்டுசேர்க்கப்படுவதைக் கணக்குத் தணிக்கை முகமையான சி.ஏ.ஜி. கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தது இங்கே குறிப்பிடத்தக்கது)
மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏன்?
மத்திய பங்களிப்புத் திட்டங்கள் என்பவை ஒன்றிய அரசினால் உருவாக்கப்படும் திட்டங்கள். அவற்றைச் செயல்படுத்த வேண்டிய கடமை மட்டுமே மாநில அரசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான மொத்தச் செலவில் மாநில அரசுகள் 40 சதவீதம் பங்களிக்க வேண்டும். ஒன்றிய அரசு 60 சதவீதம் கொடுக்கும்.
14ஆவது நிதி ஆணைய காலத்துக்கு முன்னர்வரை திட்டத்தின் மொத்தச் செலவில் 25 சதவீதம் பங்களித்தால் போதும் என்ற நிலையே இருந்தது. அதை மோடி அரசு வந்ததும் மாற்றி 40 சதவீதம் செலவுசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கான 60 சதவீத நிதியையும் தொடர்ந்து முழுமையாகக் கொடுப்பதில்லை.
2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டடங்கள் மத்திய பங்களிப்புத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டன. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.4,080 கோடி. இந்த மொத்த மதிப்பீட்டில் ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 60 சதவீத நிதி ரூ.2,448 கோடி; ஆனால், ஒன்றிய அரசு வழங்கியது ரூ. 2,145 கோடி மட்டுமே. அதாவது, 303 கோடி ரூபாய் குறைவாகக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு செலவுசெய்திருக்க வேண்டிய 40 சதவீத நிதிப் பங்கான ரூ.1,632 கோடிக்குப் பதிலாக ரூ. 302.6 கோடி கூடுதலாக, ரூ.1,934.6 கோடி செலவு செய்திருந்தது.
மத்திய பங்களிப்புத் திட்டங்களில் ஒன்றிய அரசின் இத்தகைய போக்கு குறித்து கருத்துக்கூறிய தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'முதலில் 60 சதவீதம் என்பார்கள்; பின் 50 சதவீதம்தான் கொடுப்பார்கள். அதையும் படிப்படியாகக் குறைத்து திட்டம்தான் அவர்களது பெயரில் இருக்கும். மாநில அரசுகள் திட்டத்திற்கான முழு நிதியையும் செலவுசெய்ய வேண்டி இருக்கும்' எனக் குறிப்பிட்டதை, இந்த இடத்தில் சேர்த்துப் பார்க்கலாம்.
மாநில அரசுகளிடத்தில் மக்கள்நலத் திட்டங்களுக்கான செலவுக்குப் போதிய நிதி இல்லாத காரணத்தினால்தான் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்குகிற ஏற்பாடு வந்தது. ஆனால் மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கு மாநில அரசுகள் 40 சதவீதம் செலவுசெய்ய வேண்டிய கட்டாயத்தால், மத்திய பங்களிப்பு அல்லாத வேறு மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடுவதை பாதிப்பதாக உள்ளது.
மேலும் மத்திய பங்களிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் குறிப்பிட்ட துறையில், தத்தமது மாநிலங்களின் சமூகச் சூழலுக்கு ஏற்றாற்போல மாநில அரசுகள் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேவிதமான திட்டம் என்பது மாநிலங்களின் நடைமுறைத் தேவையிலிருந்து விலகி நிற்கிறது.
ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு சமூக- பொருளாதார நிலைகளைக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டினுடைய பள்ளிக்கல்விக்கான தற்போதைய தேவையும் உத்தரப்பிரதேசத்துக்கான தற்போதைய தேவையும் ஒன்று அல்ல. ஆனால் வெவ்வேறு சமூக- பொருளாதார மட்டத்திலுள்ள மாநில அரசுகளுக்கு ஒரே விதமான திட்டத்தை வகுத்து, செயற்படுத்தவேண்டும் என கட்டாயப்படுத்துவதன் மூலம் மாநில அரசுகளின் தேவையையே ஒன்றிய அரசு மறுக்கிறது.
இதன் காரணமாக வளர வேண்டிய மாநிலங்களுக்குத் தேவையற்ற சுமையையும், வளர்ச்சியடைந்த மாநிலங்களைப் பின்னோக்கி இழுக்கிற வேலையையும்தான் மத்திய பங்களிப்புத் திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு செய்கிறது.
மாநில அதிகாரத் துறைகளில் தலையிட மத்திய பங்களிப்புத் திட்டங்களை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வது
ஒன்றிய அரசானது தனது (வருவாய்) செலவினங்களில் 16 சதவீதத்தை மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் செலவிடுகிறது. 16.4 சதவீதம் பொதுப் பட்டியலில் செலவிடுகிறது.
மத்திய பங்களிப்புத் திட்டங்களின் வழியாக மாநில, பொது பட்டியல்களில் தலையிடும் ஒன்றிய அரசு, அத்துறைகளில் விதிக்கும் நிபந்தனைகள், உருவாக்குகிற கொள்கைகள் குறித்து மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமல் எதேச்சதிகாரமாகச் செயல்படுகிறது.
மத்திய பங்களிப்புத் திட்டங்கள் தனியார்மயத்தை ஊக்குவிப்பதாக இருக்கிறது.
மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பறித்த ஜி.எஸ்.டி. வரி முறை, மாநிலங்களின் கடன்பெறும் வரம்பைக் கட்டுப்படுத்தும் நிதிப்பொறுப்பு, வரவு- செலவு கணக்கு மேலாண்மை சட்டம் (Fiscal Responsibility and Budget Management- FRBM Act) என பல்வேறு வகைகளிலும் ஒன்றிய அரசு மாநிலங்களின் நிதிக்கான வாய்ப்பு வெளிகளைக் (Fiscal Space) கட்டுப்படுத்துகிறது.
இந்நிலையில் மத்திய பங்களிப்புத் திட்டங்களுக்கான நிதியை எதிர்நோக்கவேண்டியுள்ள மாநில அரசுகளிடம், 'மக்கள் நல விலையில்லாத் திட்டங்கள் (So called, 'Freebies and Populist' Schemes)' வழியாக அவை கொண்டிருக்கிற சமூகநல அரசின் (Welfare State) அம்சங்களைக் கைவிடவும் நிர்பந்திக்கிறது. இதன் காரணமாக மாநில அரசுகள், அரசு- தனியார் கூட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. மேலும் நிதி ஆயோக்கும் இத்தகைய அரசு-தனியார் கூட்டு முறைத் திட்டங்களை ஊக்குவிக்கிறது.
நகரமைப்புத் திட்டங்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்று, ஒன்றிய அரசின் நகர்ப்புறத் திட்டங்களுக்கான நிதிப் பங்கீடு ஆகும். ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் போன்ற மத்திய பங்களிப்புத் திட்டங்கள் வழியாக நகரமைப்புத் திட்டங்களுக்குக் கொடுக்கப்படும் நிதிக்கான நிபந்தனைகளாக, பல்வேறு தனியார்மய அம்சங்களை ஒன்றிய அரசு திணித்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக, நகரமைப்புத் திட்டங்களுக்கான நிதிக்கு, ‘தமிழ்நாட்டின் தனிநபர் வருமானத்திற்கேற்ப சொத்துவரி மாற்றியமைக்கப்பட வேண்டும்’ என ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையால்தான் தமிழ்நாட்டில் தொடர்ந்து சொத்து வரி உயர்த்தப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் பழிவாங்கும் அரசியலுக்காக மத்திய பங்களிப்புத் திட்டங்கள்
மொழிவழித் தேசியங்களான மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலக் கட்சிகளுக்கு எதிரான அரசியலாக 'டபுள் இஞ்சின்' சர்க்கார் என்பதை முன்னிறுத்தும் ஒன்றிய அரசு, பல்வேறு வகையான நிதிப்பங்கீட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைப் புறக்கணிப்பது நாம் அறிந்ததே!
பேரிடர் நிதி, விளையாட்டை ஊக்கப்படுத்துவதற்கான நிதி போன்ற விருப்ப நிதிகளில் (Discretionary grants) தமிழ்நாட்டை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு, மத்திய பங்களிப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கான (100 நாள் வேலைத் திட்டம்) நிதியை கடந்த மூன்று மாதங்களாக நிறுத்திவைத்துள்ளது.
இப்படி பல்வேறு வழிகளிலும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, ஒன்றிய அரசின் எதேச்சதிகார அரசியலுக்கு மத்திய பங்களிப்புத் திட்டம் பயன்படுகிறது.
பிஎம்சிறீ திட்டத்தில் 'மும்மொழிக் கொள்கை- இந்தித் திணிப்பு' என்பதுடன், கூடுதலாக மத்திய பங்களிப்புத் திட்டங்களின் வழியேயான ஒன்றிய அரசின் தமிழ்நாட்டுவிரோதன நடவடிக்கைகளையும் கவனப்படுத்துகிறோம்.
'தமிழ்நாட்டினருடைய வரிப்பணத்தின் மீதான தமிழ்நாட்டுக்குரிய பங்கு உரிமை' எனும் நோக்கில் இவ்விவாதம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம்.
மாநிலங்களின் மீதான ஒன்றிய அரசின் கொள்கைத் திணிப்பு, மாநிலப் பட்டியல் அதிகார வரம்பிற்குள் தலையிடல்,
மாநிலங்களின் மீதான நிதிச் சுமைக்குக் காரணமான மத்திய பங்களிப்புத் திட்ட முறை முற்றிலுமாக நீக்கப்பட தமிழ்நாட்டு அரசியல் புலத்தில் செயல்படுவோர் குரல் எழுப்புவதற்கான அவசியத்தையும்,
மேலும், மேல், கூடுதல் வரிகளை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளத்தக்க வகையில் வரிப் பகிர்வுத் தொகுப்பிற்குள் (Divisible Pool) உட்படுத்துவதை தமிழ்நாட்டின் அரசியல் கோரிக்கையாக்கும் காலச் சூழலையும்
பிஎம்சிறீ திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள விவாதம் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டினரின் வரிப்பணத்தின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்துவோம்!
'தமிழ்நாட்டு மக்களின் வரி தமிழ்நாட்டின் உரிமை' என்பதை வலுவாக முழக்கம் ஆக்குவோம்!!