ஓபிஎஸ் நல்லவர் என்றும் ஆனால் வல்லவர் இல்லை எனவும் புகழேந்தி தெரிவித்துள்ளார். நாங்க கூட இல்லாத தைரியத்துல அவர இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்காங்க எனவும் விளாசியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பன்னீர்செல்வம் மேல் ஜெயலலிதா கோவமாக இருந்தார் என்று சொல்கிறார் உதயகுமார். ஓபிஎஸ்சை விட்டு இப்போ நான் ரொம்ப தூரமா இருக்கேன். ஏனென்றால் ஓபிஎஸ் மிகவும் நல்லவர். ஆனால் வல்லவர் இல்லை. அதுதான் பிரச்சினை. அவரால் எதிர்த்து போராட முடியவில்லை. வெளியே வந்ததால்தான் இந்த இரட்டை வழக்கில் என்னால் வெற்றி பெற முடிந்தது.

அது அவருக்கே புரியுது. அதனால்தான் கொஞ்சம் ஒதுங்கி வந்து இந்த அமைதியெல்லாம் ஆகாது. ஜெயலலிதாவை குலசாமி என்றெல்லாம் வர்ணித்தவர் உதயகுமார். அதுக்காக ஒரு மண்டபம்லாம் கட்டினார் உதயக்குமார். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். அன்பாக கேட்கிறேன். ஒரு பெரிய பொய்யை சொல்கிறார்.

ஜெயலலிதா ஓபிஎஸ் மேல் கோவமாக இருந்தார் என அப்பட்டமாக பொய் சொல்கிறார். குற்றச்சாட்டை முன் வைக்கிறார். 2001ல் ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்ற பின்னாலும் பொறுப்பு முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ். ஒரு நாளும் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கவில்லை.

அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அதேபோல் அவருடைய பதவியையும் எந்த காலத்தில் பறிக்கப்படவில்லை. அம்மாவின் கோபத்திற்கு ஆளாகி பதவியை இழந்தவர்கள்தான் அதிமுகவில் 99 சதவீதம் பேர் இருப்பார்கள்.

அதில் தப்பித்த ஒரு ஆள் ஓபிஎஸ் அண்ணனா தான் இருக்கணும். அதில் நேர் எதிர்மறையான கருத்துக்களை உதயக்குமார் சொல்கிறார். 2011 ல் உதயக்குமார் வந்தார். ஐந்து ஆறு மாதங்களில் அவரின் பதவி போனது. அவர் ஓபிஎஸ்சை சொல்வது சரியில்லை.

ஒரு இணக்கமான சூழ்நிலை நிலவும்போது இதையெல்லாம் சொல்லி கெடுக்கிறார் உதயக்குமார். அதேபோல் சென்னையில் ஜெயக்குமார் இருக்கிறார். ஓபிஎஸ்சை கொசு என்கிறார். கொசு ஆபத்தானது. மலேரியா கொசுவில் இருந்து தான் வருகிறது. டெங்கு கொசுவில் இருந்து தான் வருகிறது. ஓபிஎஸ் என்ற கொசு கடிக்க ஆரம்பித்தால் தாங்கமாட்டார் அவர். நாங்க இல்லாத தைரியத்தில் பேசிக்கொண்டிருக்கிறார் அவர். இப்படியெல்லாம் பேசி ஒரு இணக்கமான சூழ்நிலையை கெடுக்கிறார்கள் இவர்கள்.

ஒருபக்கம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படமே இல்லாமல் விழா எடுக்கிறார்கள். இது நியாயமா உதயக்குமார். இபிஎஸ் முகத்தில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பார்க்கிறேன் என சொல்கிறார் உதயக்குமார். அப்படிபட்டவர் அம்மா படம் இல்லாமல் உள்ளே போகிறார். இதெல்லாம் தெரியலையா? இப்படியே போனால் 2026ல் ஒரு 26 சீட்டு கூட தேராது. மதுரையில் மூன்றாவது இடத்துக்கு வந்தாச்சு.

செல்லூர் ராஜுலாம் ஒத்துக்கிட்டார். இந்த தலைமையை யாரும் ஏற்கவில்லை என்று. இப்போது செங்கோட்டையனிடம் பிரச்சினை போய் கொண்டிருக்கிறது.

உதயக்குமார் தெரிஞ்சிக்கோ. இப்படியே போனால் உன் டெபாசிட்டும் போயிடும்” எனத் தெரிவித்தார்.