செங்கை, காஞ்சியில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு: அமைச்சர்கள் விற்பனையை தொடங்கி வைத்தனர்

3 hours ago
ARTICLE AD BOX

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்களை அமைச்சர்கள் ஆர்.காந்தி, தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து விற்பனை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 15.8.2024 சுதந்திர தினவிழா உரையில், “பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற விழாவில், 1000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலுசெட்டிசத்திரத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, முதல்வர் மருந்தகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, முதல்வர் மருந்தகத்தின் மூலம் பொதுமக்களுக்கு மருந்துகளின் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், அயலக அணி நீலகண்டன், மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டு, புதியதாக தொடங்கப்பட்ட மருந்தகங்களில் குத்து விளக்கேற்றி, மருத்துவ சேவையை தொடங்கி வைத்தனர். திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதி ஊராட்சியில் கூட்டுறவுத்துறை சார்பில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார்.

திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், துணை தலைவர் சத்யா சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, புதிய முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், மானாம்பதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள எழுது பொருட்கள் விற்பனையகம் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனையகம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மானாம்பதி, அச்சிறுப்பாக்கம், முள்ளிப்பாக்கம், பையனூர், ஆமூர், குழிப்பாந்தண்டலம், புலியூர், ஒரகடம், மேலேரிப்பாக்கம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் சார்பில் வீட்டு அடமானக் கடன், நேரடி கடன், பயிர்க்கடன், பண்ணை சாராக்கடன்,

கால்நடை பராமரிப்புக் கடன், மாற்றுத்திறனாளி கடன், மத்திய காலக்கடன், முதல்வர் மருந்தகம் மானியம் ஆகிய தலைப்புகளின் கீழ் 162 நபர்களுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு கூடுதல் ஆட்சியர் நாராயண சர்மா, திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், மானாம்பதி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன், வார்டு உறுப்பினர் நிர்மலா ஜீவரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, பெருநகர் கிராமத்தில் கூட்டுறவு சங்க செயலாட்சியர் ராஜேஸ்வரி தலைமையில், காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட்ராமன், செயலாளர்கள் ஆதிசேஷன், தண்டபாணி ஆகியோர் முன்னிலையில் பெருநகர் ஊராட்சி தலைவர் மங்களகவுரி வடிவேலு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இதேபோல், உத்திரமேரூரிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது. இந்த முதல்வர் மருந்தகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதால் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மதுராந்தகம்:மதுராந்தகம் முதல்வர் மருந்தகத்தை மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழிகுமார் குத்து விளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் குமார், நகர மன்ற துணைத் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

* கல்வி நிதி வழங்கிய மாணவி
கடன் உதவித் தொகைகளை அமைச்சர் வழங்கிக் கொண்டிருந்தபோது, இள்ளலூர் கிராமத்தை சேர்ந்த அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி சரண்யா, திடீரென மேடையேறி ஒன்றிய அரசு காழ்ப்புணர்ச்சியோடு கல்வி நிதிகளை நிறுத்துவதை கண்டித்து, தமிழ்நாடு முதலமைச்சருக்கு தோளோடு தோள் கொடுக்கும் வகையில் தனது சேமிப்புத் தொகையான 12 ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலையாக மாற்றி அமைச்சரிடம் வழங்கினார். வரைவோலையை பெற்றுக்கொண்ட அமைச்சர் மாணவியின் மாநிலப்பற்றை பாராட்டி வாழ்த்தினார்.

The post செங்கை, காஞ்சியில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு: அமைச்சர்கள் விற்பனையை தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article