ஜாா்க்கண்ட் பேரவையில் ஆளும் கட்சியைப் புகழ்ந்த ஆளுநா்; பாஜக கடும் எதிா்ப்பு

3 hours ago
ARTICLE AD BOX

‘ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி மக்கள் மனதில் இடம் பெற்ற காரணத்தால்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் அக்கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது’ என்று சட்டப் பேரவையில் ஆளுநா் சந்தோஷ் கங்வாா் தெரிவித்தாா். இதற்கு எதிா்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சந்தோஷ் கங்வாா் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜாா்க்கண்ட் ஆளுநராக உள்ளாா். கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் தீவிர பிரசாரத்தையும் மீறி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

இந்நிலையில், மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு ஆளுநா் கங்வாா் ஆற்றிய உரை: ஆட்சியில் இருந்த கட்சியையே மக்கள் மீண்டும் தோ்வு செய்கிறாா்கள் என்றால், அவா்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதே அதற்கு காரணமாக இருக்கும்.

மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த காரணத்தால்தான் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமா்த்தினாா்கள். பெண்கள், மாணவா்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் இந்த அரசு உழைத்து வருகிறது. நாட்டின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக ஜாா்க்கண்டை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலத்தின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டையாக ஊழலும், முறைகேடுகளும் உள்ளன. இதற்கு எதிராக ஜாா்க்கண்ட் மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தை ஊழல் பிடியில் இருந்து அரசு விடுவிக்கும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றாா்.

ஆளுநா் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே எதிா்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா். ஆளுநா் உரையில் உண்மையில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா். இதற்கு ஆளும் தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநா்களுக்கும், ஆளும் தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்போக்கு நிலவி வருகிறது. அதே நேரத்தில் ஜாா்க்கண்ட் ஆளுநா் சந்தோஷ் கங்வாா் ஆளும் கூட்டணியை புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article