ARTICLE AD BOX
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் Bad Girl. இயக்குநர் வர்ஷா பரத் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இத்திரைப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.
அஞ்சலி சிவராமன், டீஜெ போன்றோர் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது. டீசர் வெளியானதில் இருந்து அப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள், இயக்குநரின் சர்ச்சைக்குரிய பேச்சு என ஒட்டுமொத்த எதிர்ப்பையும் இப்படம் கண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது டீசரில் சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், டீசரை இணையத்தில் இருந்து நீக்கவேண்டுமென வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டீசரை நீக்க வேண்டும்..
மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ராம்குமார் உள்ளிட்ட மூவர் மதுரை அமர்வில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், 26.01.2025 அன்று யூடியூப், இணையத்தில் பேட் கேர்ள் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன்லைனில் உள்ளது.
இதுபோன்ற காட்சிகள் குழந்தைகள் ஆபாசம், குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றின் கீழ்வருகிறது. இது பாலியல் குற்றமாகும். எனவே இந்த ஆபாசமான டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், மனு குறித்து, மத்திய அரசு மற்றும் கூகுளின் இந்திய நிறுவன அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.