ARTICLE AD BOX

image courtesy: @ICC
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் கடந்த 19ம் தேதி கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் தோல்வி கண்ட பாகிஸ்தான் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 23ம் தேதி இந்திய அணியை துபாயில் சந்திக்கிறது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்க தவறியதால் பாகிஸ்தான் அணிக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது.
அதன்படி, ஒரு ஓவரை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசி முடிக்காத காரணத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 5 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது. இந்த குற்றத்தை பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் ஒப்புகொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணை எதுவும் நடத்தவில்லை.