ARTICLE AD BOX

Image Courtesy: AFP
துபாய்,
8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக பாபர் அசாம் - இமாம் உல் ஹக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பாபர் அசாம் அதிரடியாக தொடங்கினார். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்திருந்த போது இந்த இணை பிரிந்தது. அதிரடியாக ஆடிய பாபர் அசாம் 23 ரன்னில் அவுட் ஆனார்.
மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக்கும் 10 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் சவுத் ஷகீல் 63 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் ரிஸ்வான் 46 ரன்களில் அவுட் ஆனார்.
தொடர்ந்து நிலைத்து நின்று ஆடிய சவுத் ஷகீலும் 62 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சல்மான் அலி ஆகா மற்றும் தையப் தாஹீர் ஜோடி சேர்ந்தனர். இதில் தையப் தாஹீர் 4 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் சல்மான் அலி ஆகா 19 ரன்னிலும், அடுத்து களம் புகுந்த ஷாகீன் ஷா அப்ரிடி ரன் எடுக்காமலும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட உள்ளது.