ARTICLE AD BOX
வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனால் அவரால் ஐபிஎல் – ல் கூட விளையாட முடியாத நிலை ஏற்படும் என்று பிசிசிஐ வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்றது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
3-வது டி20 போட்டியில் மட்டும் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நேற்று இரு அணிகள் இடையே கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் அபிஷேக் ஷர்மா அபாரமாக செயல்பட்டார்.
அபிஷேக் ஷர்மா 135 ரன்களை எடுத்து சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற பெருமை படைத்தார்.
20 ஓவர் முடிவில் இந்தியா அணி 9 விக்கெட்டு இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. ஆனால், இங்கிலாந்து அணி 97 ரன்களிலேயே ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 16 ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறினார்.
இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆர்ச்சர் வீசிய பந்தில் சாம்சனுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் விக்கெட் கீப்பராக களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பிங் செய்தார். இப்படியான நிலையில், சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சுமார் ஒரு மாத காலம் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பிசிசிஐ வட்டாரத்தினர்களிடமிருந்து வந்த தகவல்படி, சாம்சனுக்கு அவரது வலது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் காயத்திலிருந்து குணமாகி வலைப்பயிற்சியை மேற்கொள்ள சுமார் 5 முதல் 6 வாரங்கள் ஆகலாம்.
இதனால் வரும் 8ம் தேதி கேரளா அணிக்காக ரஞ்சி ட்ராபியில் விளையாட முடியாது என்பது உறுதியானது.