ARTICLE AD BOX
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் "கைவிலங்கு மாட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்" என்று காங்கிரஸ் புதன்கிழமை கூறியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Indians deported from US were ‘handcuffed, humiliated’, claims Congress
அமெரிக்க இராணுவ விமானம் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களை நாடு கடத்தத் தொடங்கிய ஒரு நாள் கழித்து, அந்த நாட்டில் சுமார் 11 மில்லியன் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்திய பிறகு, பிரதான எதிர்க்கட்சியின் அறிக்கை வந்துள்ளது. 205 இந்தியர்களை ஏற்றிச் சென்ற C-17 விமானம் டெக்சாஸின் சான் அன்டோனியோவிலிருந்து புறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பயணிகளில் குஜராத், பஞ்சாப், சண்டிகர், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா, “அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்படும் படங்களைப் பார்ப்பது ஒரு இந்தியனாக எனக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்று கூறினார்.
“2013 டிசம்பரில், அமெரிக்காவில் இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே கைவிலங்கு மாட்டப்பட்டு ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டதை நான் நினைவில் கொள்கிறேன். வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் அமெரிக்க தூதர் நான்சி பவலுடன் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்” என்று கேரா எக்ஸ் பதிவில் கூறினார்.
“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடுமையாக பதிலடி கொடுத்தது. அந்த நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த அமெரிக்க காங்கிரஸ் குழுவை (ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஸ்வீகெர்ட், ராப் வுடால் மற்றும் மேடலின் போர்டல்லோ) சந்திக்க திருமதி மீரா குமார், சுஷில் குமார் ஷிண்டே மற்றும் ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் மறுத்துவிட்டனர்” என்று அவர் மேலும் கூறினார்.
2013 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், “அமெரிக்காவின் நடவடிக்கையை 'வருந்தத்தக்கது' என்று கூறியதாக” கேரா கூறினார். “இந்திய அரசு அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பல சலுகைகளை திரும்பப் பெற்றது, அதில் தூதரக ஊழியர்களால் சலுகை விலையில் உணவு மற்றும் மதுபானம் இறக்குமதி செய்யப்பட்டது உட்பட சலுகைகள திரும்பப் பெறப்பட்டது” என்று பவண் கேரா கூறினார்.
“அமெரிக்க தூதரகப் பள்ளியில் வருமான வரித்துறை விசாரணையைத் தொடங்கியது... தேவயானி கோப்ரகடே அப்படி நடத்தப்பட்டதற்கு ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்தார். அமெரிக்காவின் வருத்தத்தைத் தெரிவிக்க அமெரிக்க நிர்வாகம் வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங்கிற்கு அழைப்பு விடுத்தது” என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.
மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய், “அமெரிக்க அரசாங்கம் இந்தியர்களை நம் நாட்டிற்கு திருப்பி அனுப்பிய விதத்திற்கு" எதிர்ப்புத் தெரிவித்தார். “அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட விதம் இழிவானது மற்றும் மனிதாபிமானமற்றது. டிரம்ப் நிர்வாகத்தால் இந்தியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கோகோய் எக்ஸ் பதிவில் கூறினார்.
இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டது குறித்து, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: “அமெரிக்கா தனது எல்லையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது, குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்கி வருகிறது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை அகற்றி வருகிறது. இந்த நடவடிக்கைகள் தெளிவான செய்தியை அனுப்புகின்றன: சட்டவிரோத இடம்பெயர்வு ஆபத்துக்கு மதிப்பு இல்லை.” என்று கூறினார்.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படும் முதல் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழு இதுவாகும்.
ஜனவரி 21, 2025-ல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி, நவம்பர் 2024 நிலவரப்படி 20,407 “ஆவணம் இல்லாத” இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் “இறுதி வெளியேற்ற உத்தரவுகளை” எதிர்கொள்கின்றனர் அல்லது தற்போது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தின் (ICE) தடுப்பு மையங்களில் உள்ளனர்.
இது குறித்து கருத்து கேட்க கேரா மற்றும் கோகோய் இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.