சுங்கச் சாவடி எனும் வழிப்பறி கொள்ளைகள்!

3 hours ago
ARTICLE AD BOX

சாலைகளில் சுங்கச் சாவடிகள் எதற்கு? கொள்ளை வரி வசூலிக்கும் மத்திய ஆட்சியாளர்கள் ஏன் சுங்கச் சாவடி என்பதான வழிப்பறிக் கொள்ளையை அனுமதிக்கிறார்கள்..? இதில் மக்கள் அனுபவிக்கும் இம்சைகள் கொஞ்சமா? நஞ்சமா? இதில் நடைபெறும் மோசடிகளுக்கும், மத்திய ஆட்சியாளர்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? ஒரு அலசல்;

இந்தியாவிலேயே அதிக சுங்கச் சாவடிகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. மொத்தமுள்ள 1041 சங்கச் சாவடிகளில் தமிழகத்தில் மட்டுமே 72 உள்ளன. தற்போது அதை அதிகரித்து 90 ஆக உயர்த்த போவதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. காரணம், இருப்பதே அதிகம். அதுவும் 60 கீ.மீக்கு ஒன்று என்ற விதிமுறைகளை மீறியவை உள்ளன. இந்த நிலையில் மீண்டும் மக்கள் மீது சுமையை திணிப்பதா?

ஏற்கனவே இந்தியாவில் எடுத்தற்கெல்லாம் வரி வசூலித்து வருகிறது மத்திய அரசு. அது போதாதென்று வாகனங்கள் வாங்கும் போதே சாலை வரியும் கேட்டு கட்டப்படுகிறது. அப்படி இருக்க மீண்டும் சுங்க சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பது வழிப்பறி கொள்ளையில்லையா? மக்களிடம் வாங்கும் வரியில் சாலை போட வேண்டியது அரசின் கடமை. ஆனால், தனியாரை சாலை போடச் செய்து, அதை மக்களிடம் வசூலித்துக் கொள்ள வைப்பது அட்டூழியமாகும்.

அந்த தனியார்களோ, குறிப்பிட்ட காலக் கெடுவையும் மீறி ஆண்டுக்கணக்கில் வசூல் செய்த வண்ணம் உள்ளனர். இது குறித்த பல புகார்களை அரசாங்கம் காதில் போடுவதே இல்லை. இதில் இருந்தே இது ஆட்சியில் உள்ளோருக்கும் வரி வசூலுக்கும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் உள்ள கள்ளக் கூட்டணியை உணரலாம். தன் குடிகளிடம் அத்துமீறி பணம் பறிக்கும் ஒரு நிறுவனத்தின் மீது அரசு காட்ட வேண்டிய அனுசரணையை எப்படி புரிந்து கொள்வது? இந்தியா முழுமையும் ஒப்பந்த காலம் முடிந்தும் சட்ட விரோதமாக செயல்படும் சுங்கச் சாவடிகள் குறித்த புகார்கள் எதையும் சட்டை செய்யவே மாட்டோம் என மத்திய ஆட்சியாளர்கள் சண்டித்தனம் செய்வது  ஏன்?

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது, பாஜகவானது ’’ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள சுங்கச் சாவடிகளை முற்றிலும் எடுத்துவிடுவோம்’’ என்றார்கள். ஆனால், அவர்கள் மேன்மேலும் கூடுதல் சுங்கச் சாவடிகளையும், கூடுதல் கட்டணங்களையும் ஏற்படுத்தி உள்ளார்களே தவிர, சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை. இது உழைப்பில்லாமல் பணம் பார்த்து ருசி கண்டுவிட்ட அவர்களின் மன நிலையைத் தான் காட்டுகிறது.

கீழே நாம் குறிப்பிடும் இரண்டு சம்பவங்கள் சுங்கச் சாவடிகள் இந்தியா முழுமையும் எப்படி செயல்படுகின்றன. மக்கள் இதில் எவ்வளவு துன்புகின்றனர் என்பதற்கான உதாரணங்களாகும்.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியின் ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டே முடிந்த நிலையில் தொடர்ந்து வசூல் செய்து பணம் பிடுங்வதாக  லாரி உரிமையாளர்கள்  போராடி வருகின்றனர். ஓராண்டுக்கு முன்பு வெளியான சி.ஏ.ஜி.யின் அறிக்கையின்படி, இந்த சுங்கச் சாவடி மூலம்  ரூ.28 கோடி மோசடி செய்யப்பட்டிருக்கிறது. 62 லட்சத்து 33 ஆயிரம் வாகனங்கள் இலவசமாகச் சென்றதாகவும் குறிப்பிட்டு, அதற்குரியப் பணத்தையும் மோசடி செய்து பொய்யான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக, பரனூர் சுங்கச்சாவடி மீது 420 பிரிவின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அளித்த புகாருக்கு மதிப்பென்ன? 19 ஆண்டுகளாக பணம் வசூலிக்கும் ஒரு சுங்கச் சாவடி இன்னும் போட்ட முதலீடை எடுக்கவே இல்லை என்பது வடிகட்டின பொய்யன்றி வேறென்ன?

திண்டுக்கல்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியானது அப்பகுதி வாழ் மக்களுக்கு ஒரு நிம்மதியற்ற மன நிலையை உருவாக்கி உள்ளது. 2012 அமைக்கப்பட்ட இந்த சுங்கச் சாவடி தொடர்பாக அந்த மக்கள் நடத்திய போரட்டங்கள் கணக்கற்றது!

ஒரு சுங்கச்சாவடி, நகர்ப்பகுதியின் 5 கி.மீ. சுற்றுக்குள் இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், கப்பலூர் சுங்கச்சாவடியோ ஒன்றரை கிலோ மீட்டருக்கு உள்ளாகவே அமைக்கப்பட்டது. உள்ளூர் மக்கள், உள்ளூரில் இயங்கும் சிப்காட் தொழிற்சாலைக்கு பணிக்கு வருவோர் மற்றும் பொருட்களை சப்ளை செய்ய வரும் வாகனங்கள் தினசரி நான்கைந்து முறை இந்த வழியே தான் கடந்து செல்ல வேண்டும். நல்ல ஹோட்டலுக்கோ அல்லது ஷாப்பிங்கிற்கோ, அல்லது நண்பர்களை சந்திக்கவோ அடிக்கடி இந்த சுங்க சாவடியை கடக்கையில் பணம் தருவது என்றால், இந்த எளிய மக்கள் தங்கள் சம்பாத்தியத்தை மொத்தமாக சுங்க கட்டணம் தந்துவிட்டு பட்டினி இருக்க வேண்டியது தான்.

கப்பலூர் சுங்கச் சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்தும் பொது மக்கள்

பல போரட்டங்கள் நடத்தியும் பயன் இல்லாத நிலையில் 2014 ல் உயர் நீதிமன்றத்தை அணுகியதில், ’’விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடி அமைக்கப்படவில்லை. ஆகவே, அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும’’. என்ற தீர்ப்பு கிடைத்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்த வழக்கில் உள்ளூர் மக்கள் சென்று வர அணுகுச்சாலை  இருப்பதாக ஒரு பொய்யான தகவலை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிப்பதாக பொய் உரைத்தது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

இதனால், உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்து ஏற்கெனவே இருக்கும் நடைமுறையைப் பின்பற்றவும் என  உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

உண்மையில் அந்த அணுகு சாலை என்பது 20 கீ.மீ சுற்றி ஊருக்குள் நுழையக் கூடியதாகும். கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் ஒரு வியாபாரியின் சம்பாத்தியத்திற்காக உள்ளூர் மக்கள் ஒவ்வொரு முறையும் 20 கீ.மீ. சுற்றித் தான் ஊருக்குள் நுழைய வேண்டும் என்று இந்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை சொல்லும் என்றால், இது யாருக்கான அரசு? தற்போதும் இந்த மக்கள் போராடிய வண்ணம் தான் உள்ளனர். இந்த சுங்கச் சாவடியால் சிப்காட் தொழில் வளர்ச்சியே பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

எனவே, மக்களுக்கு நாளும், பொழுதும் இம்சை தந்து கொண்டிருக்கும் சுன் க்கச் சாவடிகள் என்ற வழிப்பறிக் கொள்ளைக்கு முடிவு காட்டினால் மட்டுமே ஒரு அரசு மக்கள் நல அரசு என்று சொல்லிக் கொள்ளக் கூடிய தகுதியை எய்தும் என்பதை இங்கு ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது. என்றாவது ஒரு நாள் இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் மக்கள் அடித்து நொறுக்கக் கூடிய நிலைமைகள் உருவாக வாய்ப்புள்ளது!

சாவித்திரி கண்ணன்

Read Entire Article