ARTICLE AD BOX
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே எஸ்.குருப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ் (39 வயது), சரக்கு வாகன டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி விட்டது. மாதேசிற்கும், சந்தனப்பள்ளியை சேர்ந்த அஞ்சலி (29 வயது) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாதேசின் மனைவி நேத்ரா, குடும்பத்துடன் ஓசூருக்கு சென்று வசித்து வந்தார். அப்படி இருந்தும் மாதேஷ், கள்ளக்காதலியை சந்தித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அஞ்சலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அஞ்சலி தற்கொலை தொடர்பாக மாதேசிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து இருந்ததாக தெரிகிறது. மேலும் கள்ளக்காதலி இறந்ததை அறிந்த மாதேஷ் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கெலமங்கலம் அருகே பேவநத்தம் மலை பகுதிக்கு சென்ற மாதேஷ் அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் மாதேசை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.