ARTICLE AD BOX
9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு துபாயில் தொடங்கி நடக்கிறது.
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து மோதும் இறுதிப்போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது கருத்தை 'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா - நியூசிலாந்து என்கிற இரு சமபலம் பொருந்திய அணிகளின் மோதல் துபாய் களத்தில் எப்படி இருக்கும் என்பதை அறிய அவரை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் நம்மிடம் பேசியது பின்வருமாறு: -
துபாயில் இந்தியா ஆடுவது சாதகமா என்றால், நிச்சயம் சாதகம் என்று சொல்வேன். ஆனால், சிலர் மூக்கால அழுவுற அளவுக்கு சாதகம் கிடையாது. ஏனெனில், இந்தியா பாகிஸ்தான் செல்லாததற்கு உள்ளார்ந்த காரணங்கள் இருக்கிறது. இதையெல்லாம், கருத்தில் கொண்டு தான் ஐ.சி.சி போட்டி அட்டவணையை தயார் செய்திருக்கிறது. அதனால், அதுபற்றி புகார் சொல்வது என்பது தேவையில்லாதது என்றுதான் நான் நினைக்கிறேன்.
இதற்கு முன்பு கூட 2022 ஆசிய கோப்பை துபாயில் நடந்திருக்கிறது. தவிர, துபாய் ஆடுகளத்தில் அனைத்து அணிகளுமே முன்னர் விளையாடி அனுபவத்தை கொண்டிருக்கிறார்கள். இந்த தொடரில் ஆடும் எல்லா அணி
வீரர்களில் பலரும் ஐஎல் டி20 லீக் உள்ளிட்ட பல்வேறு தொடருக்காக அங்கு ஆடியுள்ளார்கள். எனவே, அங்கு ஆடுவது இந்தியாவுக்கு மட்டும் சாதகம் என்று கூறமுடியாது.
குறிப்பாக பார்க்கவேண்டியது என்னவென்றால், நடப்பு தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி உள்ளார்கள். அதனால்தான் அவர்கள் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
இறுதிப் போட்டியை பொறுத்தவரையில், பேட்டிங்கில் இரு அணிகளுமே சம பலத்துடன் இருக்கிறார்கள் என சொல்லாம். இங்கே கோலி என்றால், கேன் வில்லியம்சன் இருக்கிறார். இங்கே ரோகித் சர்மா என்றால், அங்கே ரச்சின் ரவீந்திரா இருக்கிறார். இங்கே ஒரு ஹர்திக் பாண்டியா என்றால், அங்கே ஒரு க்ளென் பிலிப்ஸ் இருக்கிறார். அதனால், பேட்டிங்கில் இரு அணிகளுமே சம நிலையில் இருக்கிறார்கள்.
இரு அணிகளுக்கும் இடையே எங்கே வித்தியாசம் இருக்கிறது என்றால், ஸ்பின் குவாலிட்டி தான். தரமான சுழல் பந்துவீச்சுக்கு நியூசிலாந்தில் கேப்டன் மிட்செல் சான்ட்னர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அந்த அணியில் க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் இருந்தாலும், இந்தியா அளவுக்கு தரமான ஸ்பின்னர்கள் இல்லை. இந்தியாவில் அக்சர் படேல், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, குலதீப் போன்றவர்கள் இருக்கிறார்கள். அதனால், இந்திய கேப்டனால் இவர்களுக்கு 40 ஓவர்களை வழங்க முடியும். இவர்களில் யாரும் பகுதிநேர ஸ்பின்னர்கள் கிடையாது. அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.
ஆனால், ஆட்டத்தைப் பொறுத்தவரை, இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும். ஏனெனில், இது இறுதிப் போட்டி. இந்தப் போட்டியை அழுத்தத்தை சமாளிக்கும் அணி தான் வெற்றி பெறும். பவுலிங் விருப்பங்கள் அதிகம் இருப்பதால், இந்தியாவின் கை ஓங்கி இருக்கும். ஏனென்றால், நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு பல கருப்பு பக்கங்களை காட்டியுள்ளது.
துபாய் ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு நிச்சயமாக உதவுகிறது. அதனால், முதலில் பேட்டிங் ஆடும் அணி 250 ரன்னில் இருந்து 270 ரன்கள் வரை எடுக்கலாம். எனவே, சேசிங் செய்யும் அணி கொஞ்சம் சிரமப்படலாம். போட்டி செல்லச் செல்ல ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு அதிகம் உதவும். அரையிறுதியில் இந்தியா சேசிங் செய்தது. ஒருவேளை இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் ஆடி 300 ரன்களுக்கு மேல் எடுத்தால், சேசிங் செய்வதில் நியூசிலாந்து அதிக கஷ்டப்படலாம்.
இந்தியாவில் பலருக்கும் 2-வது பிடித்த அணி எதுவென்றால், அது நியூசிலாந்து அணி தான். அந்த அணியின் வீரர்களும் அப்படித்தான். வர்ணனையில், கேன் வில்லியம்சனை பார்க்கும் போதெல்லாம், 'ஒவ்வொரு மாமியாருக்கும் இப்படிப்பட்ட மருமகன் தான் இருக்க வேண்டும்' என்றும் சொல்வேன். அந்த அளவுக்கு மிகச் சிறந்த மனிதர் அவர். மிகவும் அமைதியானவர். தன்னடக்கமுள்ள, தற்பெருமை கொள்ளாத, பகட்டிக்கொள்ளாத ஒருவர். அவரைப் போல் தான் அவரது மொத்த நாடுமே இருக்கிறார்கள். எல்லோருமே தங்கமான பசங்க. இதேபோல் தான் மிகச்சிறந்த இடது கைது வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அலட்டிக் கொள்ளாத மனிதர் அவர். நியூசிலாந்தில் தான் குறைவான கிரிக்கெட்டர்கள் உள்ளார்கள். ஆனால், அவர்கள் அவ்வளவு குவாலிட்டியான வீரர்களை உருவாக்கி வருகிறார்கள்.