ARTICLE AD BOX
“நான் இருக்கின்றபோதே தென்பெண்ணை - பாலாற்றை இணைக்க வேண்டும் என்பது எனது ஆசை என்று அமைச்சர் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வானியம்பாடியில் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நீர்வளத்துறை சார்பில் கல்லாறு மற்றும் சின்ன பாலாற்றை ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி சனிக்கிழமை (08.03.2025) தொடங்கியது.
ஜின்னா பாலம் அருகே வேலூர் மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு விழாவும் சனிக்கிழமை நடைபெற்றது.
புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு விழா வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி தலைமை தாங்கினார். நகராட்சி மன்றத் தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் வரவேற்றார். மக்களவை உறுப்பினர் டி.எம். கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “முன்னாள் முதல்வர் கருணாநிதி மடியில் கடந்த 50 ஆண்டுகள் நான் வளர்ந்தவன். நான் கோபாலபுரம் வீட்டுக்கு போகும்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறு பிள்ளையாக இருந்தார். பின்னர், தோளுக்குமேல் வளர்ந்து தோழன் ஆகி இன்று என் தலைக்கு மேலே வளர்ந்து எனக்கு தலைவனாக உள்ளார். அனைத்தும் மனதில் வைத்துக்கொண்டு காரியம் ஆற்றுவதில் கலைஞரை மிஞ்சி விடுவார் ஸ்டாலின் என்ற தைரியம் எனக்கு வந்து விட்டது.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “இந்த இயக்கத்துக்காக 70 ஆண்டு காலம் பாடுபட்டவர்களில் நானும் ஒருவன். இந்த திராவிட இயக்கம் சரியான ஆள் இல்லாவிட்டால் சரிந்து விடுமோ என நினைத்துகொண்டிருந்தேன். ஆனால், ஸ்டாலின் என்ற ஒரு தலைவன் உருவாகி இருக்கிறார். அவர் இந்த இயக்கத்தை பல்லாண்டு காலம் வழி நடத்துவார் என்ற தைரியம் வந்துள்ளது.” என்று கூறினார்.
மேலும், தென்பெண்ணை - பாலாறு இணைக்க வேண்டும் என்ற தனது ஆசையைப் பற்றி கூறிய அமைச்சர் துரைமுருகன், “சாத்தனூர் அணை நிரம்பி அதைத்தாண்டி போகும் என்ற நிலை ஏற்படும் போது அந்த தண்ணீரை திருப்பி காக்கங்கரை வழியாக பாலாற்றில் விட்டால் பாலாற்றில் தண்ணீர் போகும். அந்த தண்ணீரை தடுப்பணைகள் கட்டி தேக்கி வைத்தால் விவாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனக்கு தென்பெண்ணை - பாலாற்றை இணைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் இருக்கும் போதே அந்த திட்டத்தை நிறைவேற்றினால் எனது பெயர் இருக்கும்” என்று கூறினார்.
இதையடுத்துப் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “நீர்வளத்துறையின் மூத்த அமைச்சரால் வாணியம்பாடிக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. வேறு யாராவது இருந்தால் இது நடக்குமா என்பது கேள்விக்குறி. வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வாணியம்பாடி தொகுதி தி.மு.க-வின் வெற்றிக்கு முதல் தொகுதியாக ஆதரவாக உள்ளது. அதேபோன்று, தி.மு.க ஆட்சியில் வாணியம்பாடி தொகுதிக்கு கல்வி, மருத்துவம் என அனைத்து திட்டங்களும் வருகின்றன. ஆனால், வாணியம்பாடி தொகுதிக்காக சட்டப் பேரவையில் மக்களின் கோரிக்கைகளை கேட்க குரல் எழுப்ப ஆள் இல்லாமல் உள்ளது. வருங்காலத்தில் தி.மு.க சார்பில் குரல் எழுப்ப தொகுதி மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” கேட்டுக்கொண்டார்.