ARTICLE AD BOX
ஓபிஎஸ் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைவதாக கூறியுள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கட்சியில் இருந்து பிரிந்தவர்களை ஓநாய், களை, துரோகி விமர்சித்துள்ளது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை ஒட்டி அதிமுக தொண்டர்களுக்கு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 2026 தேர்தலுக்கு தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்தது போல அவர் கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பார்த்து நான் மகிழ்ந்தேன். ஓநாய், வெள்ளாடு… களை, பயிர்… விசுவாசி, துரோகி… என எடப்பாடி பழனிசாமி சொல்லி இருப்பது கட்சி தொண்டர்களுக்காக சொன்ன வார்த்தைகளாக இருந்தாலும், உலக நியதியும் இதுதான். இது அனைவருக்கும் பொருந்தும்.
ஓபிஎஸ் நிபந்தனை இன்றி கட்சியில் இணைவதாக கூறியுள்ளது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும்.அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டுவதற்கு, ஏன் அவர் தன்னை ஆளாக்கிக்கொண்டார்? அந்த கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது. ஒன்று சேருங்கள் என்று ஒரு மூன்றாவது நபர் சொல்வதாக ஓபிஎஸ் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி மூன்றாவது நபர் சொல்லித்தான் சேர வேண்டும் என்றால், சொல்பவர்கள் அவரவர் சுய நலத்திற்காகவும் சொல்லி இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அதில் என்ன லாபம் இருக்கிறது என்று தெரியவில்லை. பொதுவாக ஓநாய், வெள்ளாடு ஒப்பீடு. இரண்டையும் ஒன்றாக கொட்டகையில் அடைத்தால், ஓநாய் வெள்ளாட்டை அடித்துக்கொன்று விடும். விசுவாசிகளாக இருப்பவர்கள் கூட துரோகியாகி விட முடியும். ஆனால் துரோகிகள், விசுவாசிகள் ஆக வாய்ப்பு இல்லை. ஆகவே அவர்கள் இணைந்து அரவணைத்து போக முடியாத ஒரு சூழ்நிலை. காரணம் இருவருக்கும் ஒத்து வராது. அந்த வகையில் இந்த 3 ஒப்பீடுகளையும், நீங்கள் யாரோடு ஒப்பிட்டுக் கொண்டாலும் கவலை இல்லை. ஆனால் ஒப்பீடுகள் சரியானது. எடப்பாடி பழனிசாமி சரியாகத்தான் சொல்லியுள்ளார்.
தர்ம யுத்தம் நடந்த பின்னர் குருமூர்த்தி சொல்லிதான் மீண்டும் அதிமுகவில் இணைந்தேன் என்று ஓபிஎஸ் சொல்கிறார். அதுபோல ஓபிஎஸ் இணைப்பில் மூன்றாவது நபர் இருந்தார் என்றால், இரு தரப்பாக இருந்து பைசல் செய்ய ஒரு மத்தியஸ்த்தர் இருந்தார் என்றால், அவர் மூன்றாவது நபர். ஆனால் இந்த விவகாரத்தில் ஒருவர் தலையிட்டு ஓபிஎஸ் அதிமுகவில் சேர்ந்தார் என்றால், அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் அந்த குறிப்பிட்ட நபர் இரு தரப்பையும் கலந்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்படி பேசப்பட்டதாக தகவல் இல்லை. அதனால் ஒருவருக்கு ஆலோசகராக வேண்டும் என்றால் மூன்றாவது நபர் இருந்திருக்கலாம். எனவே இருதரப்புக்கும் பொதுவான மத்தியஸ்த்தராக அவர் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த 3வது நபரின் ஆலோசனையின்படி, ஒபிஎஸ் அதிமுகவில் சேர்கிற முடிவை எடுத்திருக்கலாம். அதுகூட அப்போது ஓபிஎஸ் உடன் இருந்தவர்களுக்கு தெரியாது. அப்போது, நானும் அவருடன் இருந்தேன் உண்மை. ஆனால் எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. தெரியாமல் ரகசியமாக இது நடைபெற்றுள்ளது.
அவர்களாக வந்து இணைவதை யாராவது வேண்டாம் என்பார்களா?. ஒரு கட்சிக்கு வரவு முக்கியம். எனவே வருகிறார்கள். அவர்களை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். அப்படி யாருடைய ஆலோசனையின் பேரில் ஒபிஎஸ் சேர்ந்திருந்தாலும் கடைசி வரை அந்த இடத்தை தக்கவைக்க அவர் தவறிவிட்டார். காரணம் அவரது பலகீனமா? அல்லது குணநலமா என தெரியவில்லை. இப்போது ஒட்டுமொத்த அதிமுகவும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசம் வந்து விட்டது. ஒட்டுமொத்த தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமிதான் பொதுச் செயலாளராக இருக்கிறார். எனவே ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை பொதுக்குழு அவரை நீக்கியுள்ளது. எனவே நீக்கப்பட்டவர் என்ற அளவிற்குதான் அவரை தற்போது சொல்ல முடியுமே தவிர, இனிமேல் நான் நிபந்தனை இன்றி சேர்கிறேன் என்றால், சேர்ப்பதற்கு தயாராக இருந்தால்தானே அவர் சேர்வார். சேர்ப்பதற்கே தயாரில்லை என்கிறபோது ஒருவர் எப்படி சேருவார்? இன்றைக்கு அதிமுக வலுவாக 2026 தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
2019 முதல் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் பிரிந்து சென்றவர்களையும் இணைத்து வலுவான அதிமுகவாக போட்டியிட வேண்டும் என சொல்கிறார்கள். தேர்தலில் தோல்வி என்று சொல்வதை விட வெற்றி வாய்ப்பு அல்லது ஆட்சியைப்பிடிக்கிற அளவுக்கு அந்த வெற்றி கிடைக்கவில்லை என்று வேண்டுமானாலும் சொல்லலாம். தோல்வி இல்லை என்பதற்கு காரணம் ஒரு தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்ற நாங்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் அதை விட குறைந்து கொண்டே சென்றால், கிட்டத்தட்ட கடைசி தேர்தலில் சுத்தமாக நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்து வாக்கு சதவீதத்தை இழந்தால் அது தோல்வி என்று கூட நாங்கள் ஒப்புக்கொள்வோம். ஒவ்வொரு முறையும் எங்கள் வாக்கு சதவீதம் கூடிக் கொண்டிருக்கிறது. எனவே அதிலே எங்களுக்கு தோல்வி என்பது இல்லை. வெற்றிக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
அதிமுகவில் பிரிந்தவர்கள் இணைந்தால் வெற்றி கிடைக்கும் என்கிறீர்கள். அப்போது நாங்கள் ஒன்றிணைந்து இருந்தபோது எத்தனை தோல்விகளை சந்தித்தோம். சேர்ந்திருந்த போது வெற்றி பெறாத தொகுதிகளும் உண்டு. அதனால் பிரிந்தவர்கள் சேர்ந்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. அண்ணா இருக்கிறபோது சம்பத் பிரிந்தாரா? இல்லையா? அவர் போன பிறகு அண்ணா ஆட்சிக்கு வந்தாரா? இல்லையா?. ஜெயலலிதா காலத்தில் எஸ்.டி.எஸ் பிரிந்தாரா இல்லையா? அவர் பிரிந்த பிறகு ஜெயலலிதா எத்தனை தேர்தல்களில் வெற்றி பெற்றார். அப்போது, அவர்கள் எல்லாம் ஒன்று சேர யாரும் ஆலோசனை சொல்லவில்லையே?. எடப்பாடி பழனிசாமியை கேள்வி எழுப்புபவர்களுக்கு பதில் 2026 தேர்தலாகத் தான் இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.