ARTICLE AD BOX
இன்றைய நவீன கிரிக்கெட்டில் எத்தனையோ வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். ஆனால் முதல் பந்திலேயே தூக்கி அடிக்கும் தைரியம் கொண்டவர் வீரேந்திர ஷேவாக் தான். இந்திய அணிக்கு அதிரடி ஆட்டத்தின் மூலம் பல வெற்றிகளைத் தேடித் தந்தவர் ஷேவாக். அதிரடியையும் ஷேவாக்கையும் பிரிக்கவே முடியாது என்று கூட சொல்லலாம். இவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் கூட, அவ்வப்போது கிரிக்கெட் தொடர்பான கருத்துக்களை கூறி வருகிறார். அவ்வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் கண்டதிலேயே தலைசிறந்த 5 வீரர்கள் யார் யார் என்பதை தற்போது பட்டியலிட்டிருக்கிறார்.
இந்திய அணிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி, முதல் பந்தில் இருந்தே பௌலர்களை கதிகலங்கச் செய்தவர் வீரேந்திர ஷேவாக். பவுண்டரியை நோக்கி ஒரு பேட்ஸ்மேன் பந்தை அடித்தால், ஃபீல்டர்கள் அதனைத் தடுக்க வேகமாக ஓடுவார்கள். ஆனால் ஷேவாக் பவண்டரிக்கு பந்தை விரட்டினால், அதனைத் தடுக்க ஃபீல்டர்கள் பந்தின் பின் மெதுவாகத் தான் செல்வார்கள். ஏனெனில் ஷேவாக் அடிக்கும் பந்தானது அதிவேகமாக பவுண்டரியை அடைந்து விடும் என்பது ஃபீல்டர்களின் எண்ணம்.
அதிரடிக்குப் பெயர் போனவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை முச்சதங்களை விளாசி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்து இரட்டைச் சதம் கண்டவரும் இவர் தான். கடந்த 2007 ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் ஷேவாக் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி வீரர் ஷேவாக்கின் பேட்டிங் ஸ்டைல் இன்று வரையிலும் பிரபலமானது தான். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஒடட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பல்வேறு சாதனைகளைத் தன்வசம் வைத்திருக்கும் ஷேவாக், ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த 5 வீரர்கள் யார் யார் என்பதை சமீபத்தில் தெரிவித்தார். இவர் தேர்வு செய்த வீரர்களில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினுக்கு கூட முதல் இடம் கொடுக்கவில்லை. மாறாக கிங் கோலியை முதலிடத்திற்கு தேர்வு செய்திருக்கிறார். ஷேவாக் தேர்வு செய்த வீரர்களின் பட்டியலில் 2 இந்திய வீரர்களும், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இருந்து தலா ஒரு வீரரும் உள்ளனர்.
டாப் 5 வீரர்கள்:
1. விராட் கோலி (இந்தியா)
2. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
3. இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
4. ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)
5. கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)
இந்தப் பட்டியலில் இருக்கும் வீரர்களில் தற்போது விராட் கோலி மட்டுமே கிரிக்கெட் விளையாடி வருகிறார். மற்ற 4 வீரர்களும் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர். ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் 51 சதங்களை விளாசி கோலி தான் முதலிடத்தில் இருக்கிறார். கோலி அடுத்த உலகக்கோப்பை வரை விளையாடுவார் என்பதால், சச்சினின் மற்ற சில சாதனைகளையும் இவர் முறியடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்களால் கூறப்படுகிறது.