ARTICLE AD BOX
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' செயல்பட்டு வருகிறது. வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் இத்தொழிற்சாலையில், 1,800-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்கிற பெயரில் தொழிற்சங்கம் ஒன்றைத் தொடங்கினர். பிறகு, 'தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கிடையில், 'தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாமல் தொழிலாளர் நலத்துறை தாமதம் செய்கிறது' என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, சி.ஐ.டி.யு. அதற்கு, 'ஆறு வாரங்களில் முடிவை எட்ட வேண்டும்' எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஒருவழியாகக் கடந்த ஜனவரி 27ம் தேதி 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தைத் தொழிலாளர் நலத்துறை பதிவு செய்தது. இந்தச் சூழலில்தான் சமீபத்தில் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மூன்றுபேரை பணியிடை நீக்கம் செய்தது நிர்வாகம். இதை எதிர்த்து மீண்டும் இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சாம்சங் இந்தியா தொழிற்சங்கத் தலைவர் முத்துக்குமார், " 'ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. ஊதிய உயர்வு தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என முந்தைய போராட்டத்தின் போது ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் எதையும் நிர்வாகம் பின்பற்றவில்லை. இதையடுத்து மேலாளரைச் சந்தித்து முறையிட முயற்சி செய்தோம். இதனால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்கள். மேலும் நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற தொழிலாளர் குழுவில் இணைய வேண்டும் என சி.ஐ.டி.யு-வில் இருக்கும் ஊழியர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறையில் புகார் அளித்தோம். இதையடுத்து 7 முறை பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதில், 'பணியிடை நீக்கத்தை வாபஸ் பெற வேண்டும். உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டால் கூடுதல் நேரம் பணியாற்றி அதைச் சமன் செய்து தருகிறோம்' என நாங்கள் வலியுறுத்தினோம். அதற்கு நிறுவனம் தரப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் இசைவு தெரிவிக்கவில்லை. 'சஸ்பெண்ட் செய்தவர்களை மீண்டும் பணிக்கு அழைக்க முடியாது' எனத் தெரிவித்து விட்டார்கள். எனவே நாங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துவிட்டோம். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது தொழிலாளர்துறை, காவல்துறை, சாம்சங் நிர்வாகம் மூவரின் நம்பிக்கை துரோகத்தைக் காட்டுகிறது. போதாக்குறைக்கு நிர்வாகம் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது சட்டவிரோத நடவடிக்கை" என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு 'சாம்சங் இந்தியா' தரப்பில் பேசினோம். நிறுவனம் தரப்பிலிருந்து நமக்கு அனுப்பப்பட்ட விளக்கத்தில், "சாம்சங்கில், அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான பணியிடத்தைப் பராமரிப்பதே எங்கள் முன்னுரிமை. தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் சட்டவிரோதமான நடவடிக்கைகளையும், தொழில் அமைதியையும் சீர்குலைக்க முயன்றனர். தொழில்துறை ஸ்திரத்தன்மை மற்றும் பணியிடத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் தொழிலாளர்களின் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம். அனைத்து ஊழியர்களும் நிறுவனக் கொள்கைகளுக்கு இணங்கி நடப்பது முக்கியமானதாகும். இந்தக் கொள்கைகளை மீறுபவர்கள் உரியச் செயல்முறைக்குப் பிறகு ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். எங்கள் உற்பத்தி தடையின்றி இருக்கும்போது, எங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பைப் பாதுகாக்கவும், ஒழுக்கத்தைப் பராமரிக்கவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் மாநில அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'திமுக-விடம் கட்சியை அடகு வைத்துவிட்டார் பெருந்தகை’- டெல்லி வரை சென்ற புகார்; ஓயாத பவன் பாலிட்டிக்ஸ்