UP Crime: எருமைக்காக சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற, மணப்பெண் சிக்கியது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபமான கல்லூரி:

உத்தரபிரதேச மாநிலம் ஹசன்பூரில் உள்ள ஒரு கல்லூரி, ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரமண்ட திருமண விழாவிற்காக திருமண மண்டபமாக மாற்றப்பட்டு இருந்தது. 300க்கும் மேற்பட்ட மணமக்கள் தங்களது குடும்பத்தினருடன், சடங்குகளுக்குத் தயாராக இருந்தனர். உத்தரபிரதேச அரசின் வெகுஜன திருமணம் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி, திருமணம் நடைபெறவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. மண்டபத்திற்கு வந்த ஒருவர், தனது மருமகள் அந்த கூட்டத்தில் மணமகளாக இருப்பதாகவும், சட்டவிரோதமாக அவர் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சிக்கிய பலே மணமகள்:

இதையடுத்து அஸ்மா எனப்படும் அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் ஏற்கனவே திருமணமானவர் என்பது, அரசாங்க திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்காக இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததும் அம்பலமானது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நூர் முகமது என்பவரை அஸ்மா மணமுடிந்துள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறுகளைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களாக, அஸ்மா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர்களின் விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எருமைக்காக திருமணம்:

இந்நிலையில் தான் உத்தரபிரதேச அரசின் வெகுஜன திருமண திட்டம் குறித்து அஸ்மா கேள்விப்பட்டுள்ளார். அந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்பவர்களுக்கும், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பாத்திரங்கள், புதுமண தம்பதிக்கு திருமணத்திற்கான உடைகள், வெள்ளி மெட்டி, கொலுசு மற்றும் சுவர் கடிகாரம் ஆகியவை வழங்கப்படும். இதனை அறிந்ததும் தனது உறவினர் ஜாபர் அகமது உடன் சேர்ந்து ஒரு திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, திருமணத்திற்கு கிடைக்கும் பரிசுகளை பகிர்ந்துகொள்வதோடு, கிடைக்கும் பணத்தை கொண்டு எருமை மாடுகளை வாங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மருமகளை போட்டுக் கொடுத்த மாமனார்..

இந்நிலையில் தான் மருமகள் அஸ்மாவின் திட்டத்தை அறிந்த மாமனார், திருமணம் நடைபெறும் பகுதிக்கு விரைந்து வந்து உண்மைய போட்டு உடைத்துள்ளார். மேலும், தனது மகனுக்கும் அஸ்மாவிற்கு நடந்த திருமணத்திற்கான சான்றிதழையும் சமர்பித்துள்ளார். இதையடுத்து, தலைமை வளர்ச்சி அதிகாரி அஸ்வினி குமார் மோசடி முயற்சி தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, முதலமைச்சரின் வெகுஜன திருமணத் திட்டத்தின் விதிகளை மீறியதற்காகவும், திட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக பயனடைய முயன்றதற்காகவும், அரசுப் பணிகளைத் தடுத்ததற்காகவும் அஸ்மா மற்றும் ஜாபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.