ARTICLE AD BOX
பிக்னிக், டூர் என்றாலே, ‘அந்தக் காலத்தில் கட்டுச் சோறுடன் கிளம்பினார்கள் முன்னோர்கள். இப்ப அதுக்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை நொடியில் தயாரிக்கக்கூடிய பலவிதமான ரெடிமேட் மிக்ஸ்களை பார்சல் கட்டிக் கொண்டு ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் சில பாத்திரங்களோடு சென்றால் போகிற இடத்தில் ஆரோக்கியமான மற்றும் அறுசுவையான உணவுக்கு பஞ்சமில்லை.
கோதுமை தோசை மிக்ஸ்
தேவையானவை: கோதுமைமாவு – 200 கிராம், அரிசிமாவு – 150 கிராம், சீரகம், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்.
தோசை செய்ய: கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கோதுமைமாவு, அரிசிமாவு, சீரகம், மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவைப் பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுகலானதும் திருப்பிப்போட்டு, வெந்ததும் எடுக்கவும். இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி, சட்னி சரியான சைட் டிஷ். மாதக்கணக்கில் இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
உளுந்து வடை மிக்ஸ்
தேவையானவை: உளுத்தம்பருப்பு – 100 கிராம், பச்சரிசி – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு தேவையான அளவு, உலர்ந்த கறிவேப்பிலை – சிறிதளவு.
வடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம் பருப்பு, மிளகு கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். வடை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசையவும். 10 நிமிடம் ஊறவைத்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். ஒரு மாதம்வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பஜ்ஜி மிக்ஸ்
தேவையானவை: கடலைப்பருப்பு – 200 கிராம், பச்சரிசி – 50 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, காய்ந்தமிளகாய் – 8, சோடா உப்பு – ஒரு சிட்டிகை, விருப்பமான காய் (வாழைக்காய், வெங்காயம், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, கடலைப் பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சேமித்து வைத்துக் கொள்ளவும். இதுதான் பஜ்ஜி மாவு. பஜ்ஜி தேவைப் படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பஜ்ஜி மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். விருப்பமான ஏதாவது ஒரு காயை நன்றாக சீவி, ஒவ்வொரு துண்டாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும் இரண்டு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தேங்காய்சட்னி மிக்ஸ்
தேவையானவை: தேங்காய் துருவல் – 200 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் – 3, கறிவேப்பிலை, புளி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுக்கவும். புளி, உப்பு சேர்த்து அரைத்து, மூடியிட்ட பாத்திரத்தில் சேமிக்கவும். இது இட்லி, தோசைக்கு ஏற்ற ஜோடி. தேவைப்படும்போது தண்ணீரைச் சேர்த்து சட்னியாக தயார் செய்துகொள்ளலாம். ஒரு மாதம்வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.