ARTICLE AD BOX
மத்திய அரசின் சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் பொதுமக்கள் இணைவதற்கு வசதியாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 15 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும். என்ன திட்டம்? இதில் எப்படி இணையலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
பணிபுரியும் இடம், வீடுகள், பயணங்களின் போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டால், அதற்காக ஏற்படும் செலவுகளுக்கு உதவுவதோடு, விபத்துகளால் ஏற்படும் ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு என அனைத்துக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு விபத்து காப்பீடு திட்டம் செயல்பட்டு வருகிறது. எதிர்பாராத நேரங்களில் விபத்து ஏற்படும்போது விபத்து ஏற்பட்டவரின் குடும்பம் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறது. குறிப்பாக கடன், மருத்துவ செலவு, வருமானத்தில் பாதிப்பு போன்றவை ஏற்படும்.
இது போன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக விபத்து காப்பீடு திட்டத்தை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இணையலாம். தங்களது ஆதார் எண், மொபைல் எண், நாமினி விவரங்களுடன் அணுகலாம். ரூ. 320 , ரூ 559, ரூ. 799 என்ற வகைகளில் விபத்து பிரிமியம் தொகை செலுத்தி இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். இதில் 5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும்.
தற்போது இந்த விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 24ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இது குறித்து தாம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளின் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் அனைத்து அஞ்சலகங்களிலும் இத்திட்டத்தினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை அஞ்சல் அலுவலகம், அனைத்து அஞ்சலகங்களையும் அணுகலாம் அல்லது 9894881575 என்ற எண்ணில் புதுச்சேரி கிளை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம். அதே போல தாம்பரத்தை பொறுத்தவரை 04428545531 என்ற எண்ணில் தொடர்புகொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்