உலகத் தாய் மொழிநாள்: மு.க.ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை! வாழ்த்து செய்தியில் சொல்வது என்ன?

3 days ago
ARTICLE AD BOX

மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!

உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர் 

தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம். தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை. தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது. இனியும் வீழ்த்தும். "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே " - எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்.

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர்

மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் #தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன், எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்!

அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்

அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்.

மருத்துவர் ராமதாஸ், பாமக நிறுவனர்

தாய்மொழியின் பெருமையையும், அதை வளர்க்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தக் கூடிய உலகத் தாய்மொழி நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அன்னை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைக்கும், குரல் கொடுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், நமது தாய்மொழியாம் தமிழை வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையை உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப் பட்டு வரும் கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அன்னைத் தமிழைக் கட்டாய பாடமாகவும், பயிற்றுமொழியாகவும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழிசை சௌந்தராஜன், முன்னாள் ஆளுநர்

இன்று தாய் மொழிகளின் தினம். நம் தமிழ் மொழியை போற்றுவோம். ஆனால் ஒரு மாநிலத்தில் தாய் மொழியை வைத்து அதிக அரசியல் நடந்தது என்றால் அது தமிழ்நாட்டில் தான். ஆனால் அந்த அளவிற்கு. அரசியல்வாதிகள் தமிழை ஆராதித்தார்களா என்றால் தங்கள் குழந்தைகளை கூட தமிழை ஆரத்தழுவ விடவில்லை. ஏன் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் கூட பெயர் வைக்கவில்லை. என்பதே உண்மை. அதனால் தான் நான் அடிக்கடி சொல்வதுண்டு. தமிழ் என் பெயரில் மட்டுமல்ல.. என் உயிரிலும் உள்ளது. 

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
Read Entire Article