ARTICLE AD BOX
சென்னை ராயபுரம் மேற்கு பகுதியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமியர்கள் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தனது பேச்சுக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த வாரம் சென்னை ராயப்பேட்டையில் இஸ்லாமியர்களுடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சியான இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் திரளாக இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், தி.மு.க-வின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை ராயபுரம் மேற்கு பகுதியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசியதாக வெளியான வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி சர்சையானது. அதில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமியர்கள் குறித்து இழிவாகப் பேசியதாக சர்ச்சையானது.
இந்நிலையில், “என் அன்பு இஸ்லாமிய உறவுகளே... நான் பேசிய கருத்தை வேறுவிதமாக எதிர்க்கட்சிகள் திரித்து பரப்புகின்றனர். நான் பயன்படுத்திய வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.” என்று கூறி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
என் அன்பு இஸ்லாமிய உறவுகளே...
நான் பேசிய கருத்தை வேறுவிதமாக எதிர்க்கட்சிகள் திரித்து பரப்புகின்றனர்.
நான் பயன்படுத்திய வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்🙏 pic.twitter.com/i4l3YXuDfS
அந்த வீடியோவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதாவது: “வணக்கம், நான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தி.மு.க பேச்சாளர் பேசுகிறேன். நேற்றைக்கு முன்தினம் ராயபுரம் மேற்கு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், கலைஞர் (கருணாநிதி) இஸ்லாமிய மக்களுக்கும், இஸ்லாமிய சொந்தங்களுக்கும் என்னென்ன சாதனைகளை, நன்மைகளை, உதவிகளை செய்திருக்கிறார் என்று பட்டியலிடும்போது, முஸ்லிம் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி, அவர்களால் எனக்கு ஆபத்து இருக்கிறது என்று பாதுகாப்பு கேட்ட விஜய்யை தோலுரித்துக்காட்டும் முகமாக நான் பேசுகின்றபோது, முஸ்லிம் மக்களை நான் ஏதோ இழிவுபடுத்திவிட்டதாக கருதிக்கொள்கிறார்கள். அதை சிலர் பேர் இட்டுக்கட்டி பரப்புரை செய்கிறார்கள். நான் வாழுகின்ற பகுதி முஸ்லிம்கள் நிறைந்த பகுதி, என் வீட்டின் அருகில் இருப்பது மசூதி, ஆகவே என் ஓட்டுநராக, என்னை கண்காணிப்பவராக, என் நலன் விரும்புகிறவர்களாக முஸ்லிம் மக்களே இருக்கிறார்கள். ஆகவே, எனக்கு முஸ்லிம் மக்கள் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் இல்லை. ஆதங்கத்தில் கேட்டேனே தவிர, அங்கே வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்.” என்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.