ARTICLE AD BOX
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண்குமார் (25) மற்றும் அவரது நண்பர் சுரேஷ் (எ) படப்பை சுரேஷ் ஆகியோர் நேற்று இரவு கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்திருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் எட்டு பேர் கொண்ட கும்பல் அருண் மற்றும் ரவுடி சுரேஷ் ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியைக் கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில், படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அருண் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த இரட்ை ;கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியது அதே பகுதியைச் சேர்ந்த சுக்கு காபி சுரேஷ் (25) என்பது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலியை கேளம்பாக்கத்தில் வைத்து ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்துள்ளார். இதனால், காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண், சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று இரவு (16-03-25) சுக்கு காபி சுரேஷ் முந்திக் கொண்டு அருண் குமார் மற்றும் அவரது அண்ணன் அர்ஜ{னன் ஆகியோரை கொலை செய்ய வந்துள்ளார்.
இதையடுத்து அங்கு படுத்திருந்த அருண்குமார் மற்றும் ரவுடி படப்பை சுரேஷ் ஆகியோரை சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள சுரேஷ் (எ) சுக்கு காபி சுரேஷ் உட்பட எட்டு பேரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் சென்னை முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.