ARTICLE AD BOX
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை விரைவில் அறிமுகமாக இருக்கும் ஏசி ரயில் சேவையின் அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பலரும் பொது போக்குவரத்தையே நம்பியுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னையில் ட்ராபிக் அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் மெட்ரோவும், ரயில் சேவையும் தேர்ந்தெடுக்கிறார்கள். வெகுதூரத்தில் இருந்து கூட சென்னைக்கு தினசரி வேலை, கல்லூரி என வருகிறார்கள். இருப்பதிலேயே லோக்கல் ரயில் சேவை தான் குறைந்த விலை. அதிகபட்சம் ரூ.10 தான் டிக்கெட் கட்டணமே. அதனாலும் பலரும் ரயில் சேவையை தேர்ந்தெடுப்பார்கள். இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக ஏசி ரயில் சேவை அறிமுகமாகவுள்ளது. அது குறித்த விவரங்களும், அட்டவணை பட்டியலையும் பார்க்கலாம்.
இந்த மாத இறுதிக்குள் சென்னையில் முதல் முறையாக புறநகர் ஏசி ரயில் சேவைகள் இயக்க தெற்கு ரயில்வே முயற்சிகளை செய்து வருகிறது. சென்னை ஐ.சி.எப். ஆலையில் ரயில்வே துறை சார்பில், குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்களும் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்துக்கு குளிர்சாதன மின்சார ரயில் தயாரிக்கப்பட்டது.
பயன்பாட்டிற்கு வரவுள்ள சென்னை ஏ.சி ரயிலில், 12 பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும். இந்த ரயில் வண்டியில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரயிலில் 5,500 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது. அதேபோன்று தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளன. ஏ.சி ரயிலில் படியில் பயணம் செய்வது தவிர்க்கப்படும். இதேபோன்று ரயில் பயணத்தின்போது குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவசர காலங்களில் நேரடியாக ரயில் ஓட்டுநரிடம் தொடர்பு கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள அட்டவணையில் காலை 7 மணி, பகல் 3.45 மணி, இரவு 7.35 ஆகிய 3 சேவைகள் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45க்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என்றும் தெரிகிறது. தாம்பரம்-கடற்கரை இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ஏசி ரயில்கள் நின்று செல்லும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.