ARTICLE AD BOX

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி பற்றி பேசினார். அப்போது, ” திமுக கூட்டணியில் விரிசல் விழுமா என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் தலையில் தான் மண் விழுகும்.” என பேசினார்.
இதுகுறித்து இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ” விரிசல் விழுந்தால் தான் மண் விழுகும். விரிசல் விழாமல் எப்படி மண் விழுகும். அவர் சொல்வதே தவறு. முதலமைச்சர் இதில் பாதியை ஒத்துகொண்டார். இன்னும் 6 மாதத்தில் முழுதாக இதனை ஒத்துக்கொள்வார். முதலில் விரிசல் வந்து அதற்கடுத்து தான் கூட்டணி உடையும். அடுத்த 8 மாதத்தில் முதலமைச்சர் தனியாக தான் நிற்பார். டிசம்பர் மாதத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.” என திமுக கூட்டணி பற்றி பேசினார்.
மேலும், ” தற்போது விசிக கட்சி தலைவர் திருமாவளவன், தோழமை சுடுதலில் இருக்கிறார். முதலமைச்சரை இன்று விமர்சித்தால் கூட லேசாக விமர்சிக்க வேண்டும். அடுத்த நாள் புகழ்ந்து விட வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார். வைகோ ஐயாவை பொறுத்தவரையில் ஒருவரை புகழ்ந்தால், அடுத்த ஒரு வருடம் கழித்து திட்டுவார். இதுதான் அவரது பாணி. இதேதான் வாஜ்பாய் ஐயாவுக்கு நடந்தது. வைகோ ஐயா 2026 ஜனவரியில் ஃபார்முக்கு வருவார். அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.” என அண்ணாமலை கூறியுள்ளார்.