ARTICLE AD BOX
மனிதர்களுக்கு சராசரி ஆயுள் எண்பது வயது என தோராயமாக கணக்கிடலாம். அதில் கொஞ்சம் கூடலாம், அல்லது குறையலாம். அது அவரவர் கடைபிடிக்கும் ஆரோக்கிய வழிமுறைகளைப் பொருத்தே அமையும் என்பதே நிதர்சனம்.
பொதுவாகவே நாற்பது வயது என்பது பக்குவத்தை கையாள வேண்டிய தருணத்தின் முதல்படி. அதில் கூடுமான வரையில் அப்பாதி வாழ்க்கையை ஏற்ற இறக்கமில்லாமல் சரிசெய்வது நம் கையில். பின்னா் வயது 50ல் இருந்து 60க்குள் மேலும் பக்குவம் வரவேண்டும். அப்போது எதிா்கால வாழ்வின் வரையறைகளை கணவன், மனைவி, இருவரும் கலந்து பேசி சரியான பாதையில் வாழ்க்கை எனும் ஓடத்தை கவிழாமல் ஓட்ட வேண்டும். இது போன்ற தருணங்களில் சிலர் தடுமாறுவதும், தடம் மாறுவதும், பலரது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே!
அப்போது கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும், ஈகோவை விடுத்து விட்டுக்கொடுத்து மேலும் புரிந்து வாழ்வதே நல்ல அடையாளம்.
சரி, அதற்குப்பிறகு ஓய்வு வயது. அப்போதுதான் நமக்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும், நிறையவே வரவேண்டும். ஓய்வூதியப் பணப் பயன்கள் வந்தால், அதை நிதானமாக கையாள வேண்டும். சேமிப்பு இதில் முதலிடம் வகிப்பதே நல்லது.
நாம் நமது ஆரோக்கியத்தை முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும்.
காலாண்டுக்கு ஒருமுறை முழு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
60 வயதிற்கு மேல் கோப தாபங்களை அறவே கைவிடுவது சிறப்பானது.
மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சரிவர எடுத்துக் கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சி, மெடிட்டேஷன், யோகா, போன்றவைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி நம்மை தாக்கி உள்ள நோய்க்கு ஏற்றாா்ப்போல தொடருவதே நலம்.
உணவு வகைகளை சரிவர கடைபிடிப்பது, வாயைக் கட்டாமல் ருசிக்காக தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது, நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பு.
நல்ல உறக்கம் நோயை விரட்டும்.
'தேவையில்லாத எதிா்மறை சிந்தனைகளை மனதில் ஏற்ற வேண்டாமே!' அதனால் என்ன பயன்?
இரவு சாப்பிட்டதும் உறக்கம் வேண்டாம். ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி நல்லதே!
பாத்ரூம் மற்றும் கழிவறைகளுக்கு சென்று வரும்போது, சர்வ ஜாக்கிரதையாய் சென்று வரவேண்டும். அங்குதான் அதிகம் வழுக்கும்.
தொலைக்காட்சி, செல்போன் பயன்பாடு இவைகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
மாலை இருட்டு வேளைகளில் வெளியில் செல்ல வேண்டாம்.
அதிக தூரம் மாடிப்படிகளில் தனியாக ஏற வேண்டாம்.
மருந்து மாத்திரைகளை தொடர்ந்து நேரத்திற்கு சாப்பிடலாம்.
மதுப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலும், கைவிடுவது எமனுக்கு பிடிக்காத விஷயம் !
காலையில் வாக்கிங் போனால், உங்கள் வீட்டு முகவரி மற்றும் செல்போன் நம்பர்களை துண்டு சீட்டில் குறித்து சட்டைப்பையில் வைத்துக் கொள்வது நல்லது.
நல்ல சிந்தனைகளை விடுத்து தேவையில்லாத விஷயங்களை லோடு ஏற்ற வேண்டாமே!
மனைவிக்கு உதவுகிறேன், கடிகார பேட்டரி போடுகிறேன், என நாற்காலியில் ஏறி விஷப்பரிட்சை தவிா்ப்பது நல்லது தானே!
'மனைவியோ, கணவனோ பாத்ரூம் போய் தாமதமானால் 'ஏன் என்ன ஆச்சு?' என பேச்சுக்கொடுப்பது நல்லது.
கூடுமான வரையில் இருசக்கர வாகனப் பயணம் தவிா்க்கலாம்.
தலைக்கு குளித்துவிட்டு நன்கு துடைத்து, ஈரம் காய்ந்த பின்னர் மற்ற வேலைகளை தொடரலாம்.
முடிந்தவரை திருமணம் மற்ற சடங்குகளுக்கு மகன் மருமகளை அனுப்பி வைக்கலாம்.
கால் சென்றால் நிதானமாக ஏறி இறங்குவது நல்லது.
உறங்கும் போது ஒருவரை ஒருவர் அவ்வப்போது பாா்த்துக் கொள்வது நல்லது.
கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் பரஸ்பரம் வீட்டு வேலைகளை பகிா்ந்து செய்யலாம்.
எந்த நோயாக இருந்தாலும் மருத்துவரை நாடாமல் கைவைத்தியமாக செய்ய வேண்டாம். வரவு செலவு பணம் இருப்பு போன்ற விபரங்களை மனைவி, மகன்கள் கவனத்திற்கு தெரியப்படுத்தவும். முக்கியமான நண்பர்களிடம் பேசுங்கள். அவரது ஆரோக்கியம் தவிர, ஏனைய குடும்ப விஷயங்களை பேசாமல் தவிா்ப்பது மிகவும் உன்னதமே!
கோபம் தவிா்த்தல், உணர்ச்சிவசப்படுதல் அறவே வேண்டாம்.
எந்த காரியத்தையும் மனைவியிடம் கலந்து பேசாமல் முடிவு எடுக்க வேண்டாம்.
பக்கத்து வீடுகளில் நட்பு பாராட்டுவதே நல்லது.
வீட்டில் இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியே!
கடவுள் கொடுத்த வாழ்க்கையை நாம் சிறப்பாய் வாழ்வதே ஆரோக்கியம். அதுவே நலம்.