ARTICLE AD BOX
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரலாற்றில் 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதன் மூலமாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மினி உலகக்கோப்பை என்று சொல்லப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 9வது முறையாக நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. துபாய் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களுக்கு 264 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும், அலெக்ஸ் கேரி 61 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து மிரட்டலான வெற்றியை பெற்றுள்ளது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்களும், கேஎல் ராகுல் 34 பந்துகளில் 42 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களும் எடுத்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 3வது முறையாக தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி ஏமாற்றம் அளித்தது. தற்போது 8 ஆண்டுகளுக்கு நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரலாற்றில் 5வது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்பாக 2000ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி, 2002 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி ஆகியவற்றுடன் 2013, 2017 ஆகிய ஆண்டுகளிலும் இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடி இருக்கிறது. இதனால் இந்திய அணி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.