ARTICLE AD BOX

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் செய்தி தளம் தற்போது மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை மட்டும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021 விதியின் கீழ் இந்தியாவில் மட்டும் 99 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளது. இதில் 13.27 லட்சம் கணக்குகள் எந்த ஒரு பயனரும் புகார் அளிக்காமல் அதற்கு முன்னரே தானாகவே பாதுகாப்பு கருதி தடை செய்துள்ளது.
இவ்வாறு வாட்ஸ்அப் தளம் மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதே மாதத்தில் 9,474 புகார்கள் whatsapp நிறுவனம் பெற்றுள்ளதாகவும், ஆனால் அதில் 239 கணக்குகள் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளது. மீதமுள்ள அதிகமான புகார்கள் தடை எதிர்ப்பு சம்பந்தமாக வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த கணக்குகள் தடை செய்யப்படுவதற்கான முக்கிய காரணம், தவறான குறுஞ்செய்திகளை அனுப்புவது, பயனரின் அனுமதி இல்லாமல் குழுக்களில் சேர்த்தல், பொய்யான வதந்திகளை பரப்புவது மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுவது போன்ற காரணங்களாகும்.
இதுபோன்று வாட்ஸ்அப் கணக்குகள் தடை ஏற்படாமல் இருக்க தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தகவல்களை அனுப்புதல், பயனரின் அனுமதியோடு குழுவில் சேர்த்தல், உண்மை உறுதி செய்யப்படாத தகவல்களைப் பகிராமல் இருப்பது போன்றவை மூலம் whatsapp கணக்குகள் தடைப்படாமல் செயல்படும் என வாட்ஸ்அப் தளம் அறிவுறுத்தியுள்ளது.