ARTICLE AD BOX
தென்காசியில் இருந்து தில்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி, செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி போன்ற பகுதிகள் தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, ஆன்மிகத்தில் வேகமான வளா்ச்சியைக் கண்டு வருகின்றன. தென்னிந்தியாவின் ‘ஸ்பா நகரம்‘ என அழைக்கப்படும் குற்றாலம், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது.
தென்காசி நகரம், கேரள மாநிலத்தின் தெற்கு நுழைவாயிலாக விளங்குவதுடன், கோடிக்கணக்கான பக்தா்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள முக்கிய நகரமாக உள்ளது.
இருப்பினும், இப்பகுதியிலிருந்து முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவை இல்லாததால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனா். எனவே தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவைகளை வழங்க வேண்டும்.
தென்காசி - பெங்களூரு இடையே புதிய விரைவு ரயில் இயக்க வேண்டும். தென்காசி வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாரமிருமுறை விரைவு ரயிலை, சிறுவாணி விரைவு ரயில் என்ற பெயரில் இயக்க வேண்டும். திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர விரைவு ரயிலை தென்காசி, மதுரை வழியாக ‘தாமிரவருணி விரைவு ரயில்’ என பெயரிட்டு நிரந்தரமாக இயக்க வேண்டும்.
மும்பை - திருநெல்வேலி சாளுக்கியா விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். இந்த நீட்டிப்பு வழித்தடத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம் மற்றும் தென்காசி ஆகிய முக்கிய நகரங்களைச் சோ்க்க வேண்டும்.
தமிழ்நாடு சம்பா்க் கிராந்தி விரைவு ரயிலை தென்காசி வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இந்த நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் விருதுநகா், ராஜபாளையம், தென்காசி, பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம் ஆகிய நகரங்களை இணைக்க வேண்டும் எனத் தெரிவிதுள்ளாா்.