ARTICLE AD BOX
இந்திய குடும்பங்களில் ஆண், பெண் சமமாக நடத்தப்படுவது இல்லையா? உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அம்ரிதா பிரசாத்
- பதவி, பிபிசி தமிழ்
- 2 நிமிடங்களுக்கு முன்னர்
"எனது வீட்டில் இருக்கப் பிடிக்காமல், நான் பல நாட்கள் அழுதிருக்கிறேன். யாரிடம் சொல்வது என்று தெரியாமல், விட்டு விலகிப் போகவும் முடியாமல், செய்வதறியாமல் இருக்கிறேன். 'ஒரே வீட்டில் வளர்ந்த குழந்தைகளுக்குள் ஏன் இத்தனை பாகுபாடுகள்?' என்ற கேள்வி என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று சமீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கூறினார்.
இளங்கலை படித்து வரும் 21 வயதான சமீராவுக்கு 25 வயதில் சகோதரர் ஒருவர் இருக்கிறார். வீட்டில் அவருக்கும் அவரது அண்ணனுக்கும் பாலின அடிப்படையில் தனித்தனியே விதிகள் இருப்பதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"எனது சகோதரர் அவர் விரும்பும் நேரத்தில் வெளியே சென்று வரலாம், வீட்டில் அவர் ஒரு வேலையும் செய்யத் தேவையில்லை, அவருக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் நான் கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் மற்றும் சமையல், வீட்டைச் சுத்தப்படுத்துவது என்று எல்லாவற்றிலும் உதவி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது" என்கிறார் சமீரா.
சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா ஒரு வழக்கு விசாரணையின்போது, "பாலியல் சமத்துவம் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், பள்ளிகளில் மட்டுமல்ல வீடுகளிலும் இருக்கும் பாலின சமத்துவமின்மை குறித்துப் பேச வேண்டியுள்ளது என்று வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். வீடுகளில் பாலின பாடுபாடு எவ்வாறு இருக்கிறது? பாலின சமத்துவத்தை எட்ட நிபுணர்கள் கூறும் வழி என்ன?

சமீராவை போல லோகேஷ் என்பவரும் அவரது வீட்டில் பாலின பாகுபாட்டை உணர்ந்ததாகத் தெரிவித்தார்.
"வீட்டிற்கு வெளியே செல்லும் வேலையையும் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளையும் நான் செய்வேன். ஆனால் எனது அக்கா வீட்டை விட்டு வெளியே செல்வதில் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன" என்று கூறிய லோகேஷ் தனது வீட்டார் அவரது சகோதரியை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார்.
"எனது சகோதரிக்கு 24 வயதான உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு எனது பெற்றோர் அழுத்தம் கொடுத்தனர். அப்போதுதான் உறவினர்கள் மற்றும் சமூகத்திற்கு முன்பு தனது குடும்பம் நற்பெயருடன் இருக்கும் என்று எனது பெற்றோர் கருதினர்" என்கிறார் லோகேஷ்.
இந்தக் கட்டுரைக்காகப் பேசியவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் பாலினப் பாகுபாடு இருப்பதாகத் தெரிவித்தனர். அவற்றில் சமீரா மற்றும் லோகேஷின் அனுபவங்கள் மட்டுமே உதாரணமாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
- 2024 YR4: பூமியை மோதவிருந்த பிரமாண்ட விண்கல் என்ன ஆனது? நிலவில் மோதப் போகிறதா?5 மணி நேரங்களுக்கு முன்னர்
'பாகுபாடு' என்ற சொல் நீக்கப்பட வேண்டும்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதற்கான மூலகாரணம், பாலின சமத்துவம் குறித்த அடிப்படைக் கல்வி இல்லாததுதான் எனக் குறிப்பிட்டு, இது தொடர்பாக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் ஆபாத் ஹர்ஷத் போண்டா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடந்த வழக்கு விசாரணையில், "பாலின சமத்துவம், ஆண்கள், பெண்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த நெறிமுறைகள் பள்ளிப் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்று நீதிபதி நாகரத்னா கூறியதாக 'தி ஹிந்து' நாளிதழின் செய்தி கூறுகிறது.
மேலும் மகள்களுக்கும் மகன்களுக்கும் இடையிலான பாலின சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக வீட்டில் பெற்றோரிடம் இருந்துதான் பாகுபாடே தொடங்குகிறது என்று அவர் தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பெற்றோர்கள் தங்கள் மகன்களை அல்லாமல், மகள்களைக் கட்டுப்படுத்துவதிலே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அகராதியில் இருந்து 'பாகுபாடு' என்ற சொல் நீக்கப்பட வேண்டும்" என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
- அமெரிக்காவில் புதிய பறக்கும் கார் சோதனை 24 பிப்ரவரி 2025

பட மூலாதாரம், Facebook/Bar & Bench
'வீட்டிலிருந்தே கற்றுக்கொள்கின்றனர்'
"பாலின பாகுபாடானது ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே தொடங்குகிறது. உதாரணமாக ஆண் குழந்தைக்கு கார், மோட்டார் பைக் போன்ற விளையாட்டுப் பொருட்களும், பெண் குழந்தைகளுக்கு பொம்மைகள், கிச்சன் செட் போன்ற விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.
இதுபோல அவர்களின் ஆடைகள், அதன் வண்ணங்கள் என சின்னச் சின்ன விஷயங்களில் பாலினப் பாகுபாடு குழந்தைகளிடம் புகுத்தப்படுகிறது" என்று பாலின அம்சங்கள் குறித்துப் பயிற்சி அளித்து வரும் அபர்ணா தோட்டா பிபிசி தமிழிடம் கூறினார்.
பல காலமாகப் பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காகவும் பாலின சமத்துவத்திற்காகவும் போராடி வருகின்றனர். உலகில் எவ்வளவு முன்னேற்றம் வந்திருந்தாலும், இன்னும் பாலின விஷயத்தில் சமூகம் சற்றுப் பின்னோக்கிய நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்கட்டுகிறார்.
"வீடு என்பது குழந்தைகளின் மீது மிக முக்கியமான தாக்கத்தைச் செலுத்தும் ஓரிடமாக இருக்கிறது. அங்கு எதைப் பார்க்கிறார்களோ, அனுபவிக்கிறார்களோ, அதையேதான் குழந்தைகள் அவர்களது வாழ்நாள் முழுவதும் சமூகத்தில் செயல்படுத்துகிறார்கள்" என்று அரசுப் பள்ளி ஆசிரியரான உமா மகேஷ்வரி கூறுகிறார்.
"எனது வகுப்பில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், 'நான் ஒரு ஆம்பள அப்படித்தான் கோபப்படுவேன்' என்று சக மாணவரிடம் கூறினார். இந்த நடத்தை குறித்து அவரிடம் கேட்டதற்கு 'எனது அப்பா எனது அம்மாவிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்' என்று பதிலளித்தார். இவ்வாறு குழந்தைகள் எல்லாவற்றையும் குடும்பச் சூழலில் இருந்தே கற்றுக்கொள்கின்றனர்" என்று உமா மகேஷ்வரி குறிப்பிட்டார்.
குடும்ப விஷயங்கள் குறித்து முடிவெடுத்தல், கருத்துரிமை தொடங்கி சமமான வேலைப் பகிர்வு வரை வீட்டிலுள்ள பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டால் அதைப் பார்த்து வளரும் குழந்தைகள் பாலின சமத்துவம் குறித்த சரியான கண்ணோட்டம் கொண்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி(global gender gap) குறித்து உலக பொருளாதார மன்றத்தால் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. 146 நாடுகளின் தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பகுப்பாய்வின் பட்டியலில் இந்தியா 129வது இடத்தில் இருக்கிறது.
பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் விவகாரத்தில், கடந்த ஆண்டுகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் அது முழு வீச்சில் நடைபெறாமல் மெதுவாகவே நடப்பதாக ஆசிரியர் உமா மகேஷ்வரி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன. ஆனால் இன்னும் குடும்பச் சூழலில் பெண்கள்தான் வீட்டு வேலைகளைச் செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பணியில் எத்தகைய உயர்ந்த பதவிகளை வகித்தாலும், வீட்டிற்கு வந்தால் இந்தப் பெண்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியதாக இருக்கிறது" என்கிறார்.
"பொதுவாக பெண்கள், அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து, எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று அவரது குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். அவர்களுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டாலும், குடும்பத்தின் நலன் மீது கொண்ட நாட்டத்தால், அவர்கள் வீட்டு வேலைகளில் பங்களிக்கத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதை ஆண்கள் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்."
இவ்வாறு பாலின சமத்துவம் இல்லாத ஒரு வீட்டிலும், அதைப் பற்றிக் கற்பிக்கப்படாத ஒரு பள்ளியிலும் ஒரு குழந்தை பயிலும்போது, அவர் எவ்வாறு சமூகத்தில் பாலினப் பாகுபாடு காட்டாமல் இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
'பாலின சமத்துவப் பாடங்கள் தேவை'

"வெறும் அரசாங்கத்தின் கொள்கைகள், சலுகைகள் மற்றும் சட்டங்களால் மட்டுமே பாலின சமத்துவத்தை நிலைநாட்ட முடியாது, மக்கள் மனதில் முதலில் இந்த மாற்றத்திற்கான விதையை விதைக்க வேண்டும்" என்று கூறுகிறார் கல்வியாளர் தேவநேயன்.
பாலினப் பாகுபாடுடைய கலாசாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வர கல்வியே அதற்குச் சிறந்த வழி என்று வலியுறுத்தும் அவர், "பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்குமான தற்போதைய பாடத் திட்டத்தில் இதற்கான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மேலும் இதை மாணவர்களுக்கான புரிதலோடு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற பயிற்சியும் ஆசிரியர்களுக்கு முதலில் வழங்கப்பட வேண்டும்," என்கிறார்.
கடந்த 2024ஆம் ஆண்டு, கேரளாவின் மாநில அரசு, பாலின சமத்துவம் புகட்டும் நோக்கில் பள்ளிப் பாடத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தது. அதில் ஆண்களும் பிற குடும்ப உறுப்பினர்களும் பெண்களுடன் சேர்ந்து சமையலறையில் வேலை செய்வதைக் காட்டும் படங்கள் பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் பாலினப் பாகுபாட்டை அகற்றி, அனைவரையும் உள்ளடக்கிய கண்ணோட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கேரளா மாநில அரசு அப்போது குறிப்பிட்டிருந்தது.
"பாலியல் மற்றும் பாலினம் சார்ந்து தெளிவான புரிதலை நாம் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குக் கற்பித்தால், அவர்கள் எதிர்காலத்தில் சுயமாக ஆன்லைனில் இருந்தோ, அல்லது அவர்களைச் சுற்றி நடக்கும் தவறான முன்னுதாரணங்களில் இருந்தோ கற்றுக் கொள்வதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது" என்கிறார் கல்வியாளர் தேவநேயன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)