இந்த வார ராசி பலன் : பிப்ரவரி 21 2025 முதல் பிப்ரவரி 27 2025 வரை

4 days ago
ARTICLE AD BOX

இந்த வார ராசி பலன் : பிப்ரவரி 21 2025 முதல் பிப்ரவரி 27 2025 வரை

Weekly
lekhaka-Bernadsha A
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி மாத நான்காவது வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் கும்ப ராசியில் இருக்கிறார். செவ்வாய் வக்ரகதியில் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். 24 ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். புதன் கும்ப ராசியில் இருக்கிறார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் மீன ராசியில் நிற்கிறார். சனி பகவான் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். மீனத்தில் ராகு... கன்னியில் கேது... என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில் கிரகங்களில் மாற்றம் இல்லை.

சந்திரன் இந்த வாரம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார்.

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்

சூரியன் - கும்ப ராசி
செவ்வாய் - மிதுன ராசி
புதன் - கும்ப ராசி
குரு - ரிஷப ராசி
சுக்கிரன் - மீன ராசி
சனி - கும்ப ராசி
ராகு - மீன ராசி
கேது - கன்னி ராசி

மேஷம்

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். மளமளவென்று அதிகரிக்கும் கடன்களை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களால் மருத்துவச் செலவு செய்வீர்கள். ஆரம்பத்தில் இடையூறாக இருந்த சந்திரன் வாரக் கடைசியில் நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். செவ்வாய் 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள். வாக்கு சாதுரியத்தால் வியாபாரத்தில் வெற்றியை பெருக்குவீர்கள். புதன் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசாங்கத்தில் நினைத்த வேலைகள் தடைகள் இல்லாமல் நடக்கும். தொழிலில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். திட்டம் போட்டு வெற்றி பெறுவீர்கள். குரு பகவான் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். திருமணம் போன்ற காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். மேலதிகாரிகளின் தொந்தரவு மன அமைதியைக் கெடுக்கும். லாட்டரி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். சுக்கிரன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார் குழந்தை செல்வம் கிடைக்கும். சனி பகவான் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். பெரியோர்களின் சந்திப்பால் அனுகூலமான காரியங்கள் நடக்கும். சுக்கிரன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கூட்டு வியாபாரத்திற்கு வழித்தடம் அமைப்பீர்கள். உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகள் பணிந்து போவார்கள்.
21,22 ஆம் தேதி சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். நீங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சந்திர பகவானின் சஞ்சாரம் தொழிலில் ஏற்ற இறக்கத்தைக் கொண்டு வரும். செவ்வாய் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பீர்கள். கவலையால் உடல் நலம் பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. புதன் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். வீண் அழைச்சலையும் பணச் செலவையும் வெளியூர்ப் பயணங்கள் ஏற்படுத்தும். குருபகவான் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். ஊக்கத்துடன் வியாபாரத்தைக் கவனிப்பீர்கள். கமிஷன் வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். சுக்கிரன் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். மணமேடை ஏறுவதற்காக காத்திருக்கும் இளம் வயதினருக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சனி 10 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீர்கள். கட்டுமான தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ராகு 11ஆம் வீட்டில் இருக்கிறார். வேலையாட்களை பொறுமையுடன் அணுக வேண்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவமானம் ஏற்படும். தொழில் துறை சீராக இருக்கும். கேது 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அசாத்திய துணிச்சலுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு ஊக்கத்தைக் கொடுக்கும்.
23,24 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

மிதுனம்

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். விளையாட்டுக்குப் பேசி வினையை விலைக்கு வாங்காதீர்கள். கடுமையான அலைச்சலுக்குப் பிறகு காரியங்கள் கைகூடும். சந்திரனின் சஞ்சாரங்கள் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும். செவ்வாய் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக நடக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். விரோதிகள் வீழ்ச்சி அடைவார்கள். புதன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். தேவையில்லாத மனக்குழப்பம் அடைவீர்கள். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். குருபகவான் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். மேலதிகாரிகள் எரிச்சல் படுவார்கள். கூட்டுத் தொழில் சிக்கலை கொண்டு வரும். பதவிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுக்கிரன் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சண்டையில் போய் முடிய வாய்ப்பு இருக்கிறது. சனி பகவான் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரம் மந்தமாக நடக்கும். தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள். ராகு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகள்அனுசரணையோடு நடந்து கொள்வார்கள். கேது 4 ஆம் வீட்டில் இருக்கிறார். வேளா வேளைக்கு சாப்பிட முடியாத அளவிற்கு அலைச்சல் அதிகரிக்கும். உரிய நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். கடுமையாக உழைப்பீர்கள். அதற்கு தகுந்த பலனையும் பெறுவீர்கள்.
24,25 ஆம் தேதி சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

கடகம்

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். அனாவசியமான கோபம் நல்ல மனிதர்களின் நட்பைப் பாழாக்கும். சந்திரனின் சஞ்சார பலன்கள் ஏற்றம் இறக்கமாக இருக்கும். செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பச் சிக்கல் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும். புதன் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் குழந்தைப் பாக்கியம் சித்திக்கும். அரசுப் பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். குரு பகவான் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். தங்க நகைகள் வாங்குவீர்கள். கடன் தொல்லைகள் கைவிட்டுப் போகும். திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். சுக்கிரன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். நீண்ட கால திருமணம் முயற்சி வெற்றி பெறும். மனைவி மக்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். சனிபகவான் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இடைவெளி விட்டு எச்சரிக்கையுடன் பழகுங்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் செல்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். ராகு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆடம்பர விருந்துகளுக்கு அதிகம் செலவு செய்வீர்கள். கேது 3 ஆம் வீட்டில் இருக்கிறார். சகோதர சகோதரிகளுக்கு செலவு செய்வீர்கள். கடன் தொல்லைகள் மனதை வாட்டும். வீண் அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும்.
25,26 ஆம் தேதி சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.

சிம்மம்

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
உங்கள் ராசிநாதன் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். சிக்கனமாகச் செலவு செய்தாலும் பணத்தட்டுப்பாடு கை மீறி போகும். மனைவி மக்களால் மனக் கிலேசமடைவீர்கள். நண்பர்களும் எதிரிகளாக மாறுவார்கள். செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். இந்த வாரத்தில் பொருள் வரவு அதிகமாக இருக்கும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கூட இருப்பவர்களே குழி பறிக்க நினைப்பார்கள். குரு பகவான் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலை நேர்மையாக நடத்துவீர்கள். மனதில் தீய எண்ணங்கள் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுக்கிரன் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. பிரிந்து போன உறவை ஒட்ட வைப்பீர்கள். சனி பகவான் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு இடையூறாக இருந்த எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். ராகு 8 ஆம் வீட்டில் இருக்கிறார். நண்பர்களின் துன்பத்தைப் போக்க பொருள் உதவி செய்வீர்கள். அரசாங்க அதிகாரிகளால் இடையூறு ஏற்படும். வீண் பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். கேது 2 ஆம் இடத்தில் இருக்கிறார். செலவைக் கட்டுப்படுத்தி வரவைப் பெருக்குங்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற சிரமப்படுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும்.

கன்னி

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
சூரியன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். இழுபறியாக இருந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். சந்திரனின் சஞ்சாரம் சீரான பலனைத் தரும். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். உங்கள் தகுதியைப் புரிந்து கொள்ளாத ஒருவர் தரக்குறைவாக பேசுவார். மனக் கவலையால் விரக்தியின் எல்லைக்கே செல்வீர்கள். புதன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் திருப்பமான பலனைச் சந்திப்பீர்கள். வேலை மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். குருபகவான் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரம் விருத்தியடையும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். சுக்கிரன் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். பிடிவாதமாக காரியத்தில் இறங்குவீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். எதிரிகள் செய்யும் கெடுதல் உங்களுக்கு நன்மையாக முடியும். சனி பகவான் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளியூர் பயணங்களால் அவ்வளவு பலன் கிடைக்காது. பந்தய வியாபாரத்தில் இறங்காதீர்கள். ஆன்லைன் சூதாட்டம் ஆகவே ஆகாது. ராகு 7 ஆம் வீட்டில் இருக்கிறார். எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்காதீர்கள். நெருங்கிய உறவினர் வீட்டில் துக்க சம்பவம் நடக்கும். கேது 1 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். தொழில் மாற்றத்திற்காக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள். அரசாங்க வேலைகள் தாமதமாக நடக்கும்.

துலாம்

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். சின்னக் குழந்தை தவழ்ந்து செல்வதை போல் காரியங்கள் சற்று தாமதமாக நடக்கும். குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் உண்டாகும். சந்திரனின் சஞ்சாரம் சாதகமாக இல்லை. கொடுத்த கடனைக் கேட்டால் பிரச்சனை வரும். செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். எலியும் பூனையும் போல் கணவன் மனைவி இருப்பார்கள். பணவிரயும் உண்டாகும். தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படும். புதன் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழில்துறைகள் மந்தமாக நடக்கும். மேலதிகாரிகள் குடைச்சல் கொடுப்பார்கள். சொத்து விற்பதாக இருந்தால் தள்ளிப் போடுங்கள். குரு பகவான் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரம் சற்று மந்தமாக நடக்கும். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். சுக்ரன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். நம்பிக்கையுடன் தொடங்கும் காரியத்தில் கூட சறுக்கல் ஏற்படும். உறவினரிடம் எச்சரிக்கையாக இருங்கள். சனி பகவான் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கையுடன் இறங்குங்கள். கமிஷன் வியாபாரம் சுணக்கமாக நடக்கும். ராகு 6 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவீர்கள். வரவுக்கு மேல் செலவுகள் வந்து வாட்டும். கேது 12 ஆம் இடத்தில் இருக்கிறார். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். உறவினர்களிடம் மனத்தாங்கல் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
சூரியன் 4 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும். சகோதரர் விஷயங்களில் தலையிட்டு கெட்ட பெயரைச் சம்பாதிக்காதீர்கள். சந்திரனின் நகர்வு பணமுடக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். நீண்டகாலமாக வாட்டிய நோய் பிரச்சனை தீரும். எதிரிகளின் சூழ்ச்சி மறையும். ஆடை ஆபரணங்கள் வாங்கலாம். புதன் 4 ஆம் ஆம் வீட்டில் இருக்கிறார். கொடுத்த வேலையை அக்கறையுடன் பாருங்கள். வியாபாரம் ஏற்றும் இறக்கமாக இருக்கும். புதிய முதலீடுகள் வேண்டாம். குருபகவான் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்கள் உறவினர்கள் அதிகாரிகள் ஆதரவு உண்டு. வெளியூர் பயணங்கள் நல்ல பலனைத் தரும். சுக்கிரன் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். உறவினர் வகையில் செலவு வரலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். சனி பகவான் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் புதிய ஜீவன் உருவாகும். ஏதோ ஒரு வகையில் மனக்கவலை தூக்கத்தைக் கெடுக்கும். ராகு 5 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். ஆடல் பாடல் கேளிக்கை நிகழ்ச்சியில் மனம் ஈடுபடும். கேது 11 ஆம் வீட்டில் இருக்கிறார். வழக்குகளால் அலைச்சல் ஏற்படும். தொழிலில் முழு முயற்சியுடன் இறங்குவீர்கள்.

தனுசு

தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் இருக்கிறார்.
எந்தக் காரியத்தையும் எச்சரிக்கையுடன் செய்தால் தொல்லைகள் வராது. வாகனங்களில் போகும்போது கவனம் சிதறக் கூடாது. பொருள் விரயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சந்திரன் பாதகமாக இருப்பதால் மனக்கவலை ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். தொழிலை பதமாக நடத்துங்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையாக பேசுங்கள். புதன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். தடைப்பட்டு நின்று போன காரியங்கள் இடையூறின்றி கை கூடி வரும். வெளிநாட்டுப் பயணம் நல்ல பலனைக் கொடுக்கும். போட்டி பந்தயங்கள் அமோக வெற்றி தரும். குருபகவான் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். மேற்படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்லலாம். உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். தொழில் சுமாராக நடக்கும். சுக்கிரன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். வேண்டா வெறுப்பாகச் செய்யும் காரியங்கள் கூட வெற்றி தரும். சனி பகவான் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். திருமண ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு விடிவு பிறக்கும். தொழிலில் மாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். ராகு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். கமிஷன் வியாபாரம் சிறப்பான லாபத்தைக் கொடுக்கும். அலைச்சல் காரணமாக வேளைக்கு உணவு சாப்பிட முடியாது. கேது 10 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.

மகரம்

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
சூரியன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். சகோதரி வகையில் செலவுகள் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களை விலக்குவது நல்லது. வீண்வம்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சந்திரன் சஞ்சாரம் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க வேலை பார்ப்போர் கெட்ட பெயர் வராமல் செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். புதன் 2 ஆம் எட்டாம் வீட்டில் இருக்கிறார். துணிச்சலுடன் தொழிலை மேம்படுத்துவீர்கள். காதலில் வெற்றி பெறுவீர்கள். பொறுமையுடன் நடந்து கொண்டால் பொருள் வரவு அதிகரிக்கும். குரு பகவான் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவி மக்கள் மனதுக்கு இதமாக நடந்து கொள்வார்கள். வீண் அலைச்சலால் வெளியூர்ப் பயணங்களில் உடல் சோர்வு ஏற்படும். சுக்கிரன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். காதலியின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தடுமாறுவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு குழப்பம் தோன்றும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். சனி பகவான் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். ராகு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். பொருள் வரவு தாராளமாக இருந்தாலும் பணம் கையில் தங்குவது கஷ்டம். கேது 9 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசியல் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
சூரியன் 1 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் நண்பர்களும் உதவி தாமதமாக கிடைக்கும். புதிய முதலீடுகளை கவனமாக செய்யுங்கள். உலவுகின்ற நிலவால் வேலையில் உற்சாகம் ஏற்படும். கணிசமான லாபம் கிடைக்கும். செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில் மிக முன்னேற்றமாக நடக்கும். புதன் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். பெண்களால் பொருள் வரவு உண்டாகும். வீடு வாசல் சொத்து சுக பிராப்த்தி ஏற்படும். குரு பகவான் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். போட்டியாளர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வியாபாரத்தை நடத்துவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். சுக்கிரன் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் விரோதம் பாராட்டுவார்கள். சனிபகவான் ராசியிலேயே இருக்கிறார். நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். கட்டிட வேலை பார்ப்பவர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் தொழில் செய்ய வேண்டும். ராகு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். சகோதரர்களால் பொருள் விரயம் ஏற்படும். மனைவியின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கேது 8 ஆம் இடத்தில் இருக்கிறார். இல்லறத்தில் புயல் காற்று வீசும். புத்திசாலித்தனமாக நடந்து பிரச்சனையை சமாளிப்பீர்கள்.

மீனம்

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே....
சூரியன் 12 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் அதிக லாபம் அடைவீர்கள். வெளியில் தொல்லை அதிகம் இருந்தாலும் வீட்டில் அமைதி நிலவும். செவ்வாய் 4 வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஆன்லைன் வியாபாரம் நல்ல பலனைத் தரும் நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். புதன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். மனைவி மக்கள் இம்சையை சந்தோஷம் அடைவீர்கள். வீடு புதிய வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். தீய செயல்களில் மனதை ஈடுபடுத்தாதீர்கள். குரு 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். சுக்கிரன் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். எடுத்த காரியங்களில் ஏற்றம் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். மங்கல காரியங்கள் சிறப்பாக நடக்கும். ராகு 1 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தான தர்மங்கள் செய்வீர்கள். கேது பகவான் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபார விருத்திக்காக வெளியூர்ப் பயணம் செல்வீர்கள். அதே நேரத்தில் வாகனம் ஓட்டும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

More From
Prev
Next
English summary
thatstamil presents Weekly astrology forecast, free astrology, predictions and more. அனைத்து ராசிகள், நட்சத்திரங்களுக்கு தட்ஸ்தமிழ் வழங்கும் வார ராசி பலன்
Read Entire Article