ARTICLE AD BOX
துபாய்: ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் ஆஸ்திரேலியா இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அந்த அணியை நாக்-அவுட் போட்டிகளில் வீழ்த்துவது என்பது மிகக் கடினமான விஷயமாகவே இருந்துள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் உலகில் எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை இரண்டு முறை செய்து ஆஸ்திரேலியாவை மிரள வைத்துள்ளது இந்திய அணி.
இதுவரை ஐசிசி நடத்திய தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிகபட்சமாக 261 ரன்கள் என்ற இலக்கு தான் சேஸிங் செய்யப்பட்டு உள்ளது. அதையும் இந்திய அணி தான் செய்தது. 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 261 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்து இருந்தது.

தற்போது அதை முறியடித்து 265 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எட்டி இருக்கிறது. ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறந்த சேஸிங்கை செய்து சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
துபாய் மைதானம் மந்தமானது என்பதாலும், ஆஸ்திரேலிய அணியில் அதிக சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தனர் என்பதாலும் இந்திய அணிக்கு இது சவாலானதாகவே இருந்தது. முதல் இரண்டு விக்கெட்டுகளை 43 ரன்களுக்கு இழந்த இந்திய அணி அதன் பின் சேஸிங்கை கவனமாக ஆடியது.
IND vs AUS: கடைசி நிமிட ட்விஸ்ட்.. ஏமாந்த ஆஸ்திரேலியா.. சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு சென்ற இந்தியா
விராட் கோலி 84 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களும் எடுத்தனர். கே.எல். ராகுல் 42, அக்சர் பட்டேல் 27, ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த அணி என்ற தனது சாதனையை தானே முறியடித்தது இந்திய அணி. 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக இந்தியா முன்னேறி உள்ளது.