ARTICLE AD BOX
ஆர்டர் செய்தது என்னவோ ரூ. 16,680-க்கு மொபைல் போன்.. ஆனா வந்தது பிஸ்கட்டும் சோப்பும்! மக்களே உஷார்!
ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் பெருகி வரும் இக்காலத்தில் மக்கள் வசதியாக வீட்டிலிருந்து ஷாப்பிங் செய்தாலும், அது தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் ஆன்லைனில் போன் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மொபைல் போனுக்கு பதிலாக சோப்பு மற்றும் பிஸ்கட் பாக்கெட் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஆன்லைன் ஷாப்பிங்கில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது போன்ற மோசடிகள் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்துகிறது.

உள்ளூர் கல்லூரியில் பணிபுரியும் பாதிக்கப்பட்ட ஷேக் சாராய் பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று ஒரு மொபைல் போனை ஆர்டர் செய்தார். அதோடு கேஷ்-ஆன் டெலிவரி ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்திருந்தார். இதனால் தொந்தரவு இல்லாமல் தான் ஆர்டர் செய்த பொருள் கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று டெலிவரி ஏஜென்ட் என்று கூறிக்கொண்டு ஒருவரிடம் இருந்து ஷேக் சாராய்க்கு அழைப்பு வந்தது.
அதோடு டெலிவரி ஏஜென்ட் அன்றைய தினமே பார்சலை ஆர்டர் செய்யவா? என்றும் ஷேக்கிடம் கேட்டுள்ளார். ஆனால் ஷேக் மறுநாள் காலை வரை பொறுத்து இருந்து டெலிவரி செய்யும் படி கூறியுள்ளார். இதன் காரணமாக டெலிவரி ஏஜென்ட் மறுநாள் காலை 3 முறை ஷேக்-கை தொடர்பு கொண்டுள்ளார். பின்பு ஷேக்-கை சந்தித்து ஒரு பார்சலை வழங்கியுள்ளார்.
டெலிவரி ஏஜென்ட் கொடுத்த போனை வாங்கி யூபிஐ மூலமாக ஷேக் 16,680 ரூபாயை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அலுவலகத்திற்கு சென்று பார்சலை அன்பாக்ஸ் செய்த பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ஷேக் உடனடியாக டெலிவரி ஏஜென்ட் நம்பருக்கு டயல் செய்தார்.
பொதுவாக ஒரு ஷாப்பிங் இணையதளத்தில் புகார் அளித்தால் பிரச்சனை தீர்க்கப்படும். ஆனால் இந்த முறை டெலிவரி ஏஜென்ட் மொபைல் நம்பர் சற்று நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆனது. ஷாப்பிங் வலைதளத்திற்கு அவர் அனுப்பிய மெயில்களுக்கும் பதில் பெறப்படவில்லை. இதனால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்ற ஷேக் டெலிவரி ஏஜென்ட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இரண்டாவது டெலிவரி: முதல் முறையாக ஏமாற்றப்பட்ட ஷேக்-கிற்கு மறுமுறை இரண்டாவது டெலிவரி ஏஜென்ட்டிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போதுதான் உண்மையாகவே ஷேக் ஆர்டர் செய்த மொபைல் போன் வந்துள்ளது. டெலிவரி ஏஜென்ட் 16,280 ரூபாய் பணம் செலுத்தும் படி ஷேக்-கிடம் கூறியுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து தனது விரக்தியை வெளிப்படுத்திய ஷேக், "இப்படிப்பட்ட மோசடிகள் எப்படி நடக்கிறது? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் என்னுடைய மொபைலில் ஆர்டர் செய்தேன் என்பது மற்றவர்களுக்கு எப்படி தெரியும்? மோசடிக்காரர்கள் என்னுடைய மொபைல் நம்பர் உட்பட அனைத்து விவரங்களையும் எவ்வாறு பெற்றனர்?" என்று தனது கேள்வியை முன் வைத்துள்ளார். மோசடியாக பணம் எடுக்கப்பட்டதை விட, தனிப்பட்ட நபர்களின் தரவுகளில் ஏற்படும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த கவலையை இந்த சம்பவம் தூண்டியுள்ளது
ஷேக் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாடிக்கையாளர்களின் விவரங்களை மோசடிக்காரர்கள் எப்படி பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விசாரணை நடந்து வருகிறது.