ARTICLE AD BOX
இனி மது அருந்தி வாகனம் ஓட்டினாலும் இன்சூரன்ஸ் உண்டு.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. சாலை விபத்தில் யாரேனும் உயிரிழந்தால் அந்த விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுனர் மது அருந்தி இருந்தாலும், இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அன்று ராஜசேகரன் என்ற நபர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அதி வேகமாக வந்த ஒரு வேன் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த ராஜசேகரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு தான் வேனை ஓட்டி வந்தவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

இதற்காக ராஜசேகரனின் குடும்பத்திற்கு மோட்டார் வாகன விபத்துக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் அந்த இழப்பீட்டுத் தொகை போதாது எனக் கூறி, அவருடைய குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி இதற்கு முன்னர் கேரள உயர் நீதிமன்றம் முகமது ரஷீத் என்றநபரின் வழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.
அந்த தீர்ப்பில் வாகனம் ஓட்டி வருபவர் மது அருந்திவிட்டு ஓட்டினாலும், காப்பீடு பெற்றவருக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை அடிப்படையாக வைத்து ராஜசேகரனின் குடும்பத்திற்கும் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்றாலும், அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு ஒரு புறம் இருக்க இன்சூரன்ஸ் எடுத்து வைப்பதன் முக்கியத்துவத்தையும் இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம். இன்றெல்லாம் பலருக்கும் விழிப்புணர்வு அதிகரித்து இன்சூரன்ஸ் எடுக்கின்றனர். இருந்தும் சிலர் அதற்காக செலவு செய்ய வேண்டுமா என்று யோசிக்கின்றனர். எதிர்பாராத இழப்புகளை சந்திக்கும் பட்சத்தில் இன்சூரன்ஸ் பெற்று வைப்பது எவ்வளவு முக்கியமானதாக இருக்கும் என்பதை இந்த சம்பவத்தை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
சாலை விபத்துகளில் உயிரிழந்த நபர்களையே முழுமையாக நம்பி இருக்கும் குடும்பங்களுக்கு இது போன்ற தீர்ப்புகள் கண்டிப்பாக உதவிகரமானதாக இருக்கும். யாரோ ஒருவர் குடித்துவிட்டு வந்து விபத்துகளை ஏற்படுத்தும் பட்சத்தில் அப்பாவியாக உயிர்விடும் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.