ARTICLE AD BOX
IRCTC, IRFC நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து… மத்திய அரசு அறிவிப்பு..
டெல்லி: மத்திய அரசு ரயில்வே துறையை சார்ந்த ஐஆர்சிடிசி (IRCTC) மற்றும் ஐஆர்எப்சி (IRFC) ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் நவரத்னா அந்தஸ்து பெற்ற 25ஆவது நிறுவனமாக ஐஆர்சிடி-யும், 26வது நிறுவனமாக ஐஆர்எப்சியும் சாதனை படைத்துள்ளன.
ஐஆர்சிடிசி பொறுத்த வரை மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2023-24 ஆம் நிதி ஆண்டில் 4,270 கோடி ரூபாய் வருமானமும் 3,229 கோடி ரூபாய் நிகர மதிப்பும் கொண்டிருக்கிறது. ஐஆர்எப்சி நிறுவனம் 2023 -24ஆம் தேதி 26,644 கோடி வருமானம் ஈட்டி இருக்கிறது, மேலும் 49,178 கோடி ரூபாய் நிகர மதிப்பு கொண்ட நிறுவனமாகவும் இருக்கிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து திங்கட்கிழமை அன்று பங்குச்சந்தையில் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.75 சதவீதம் உயர்ந்து 676 ரூபாய் என வர்த்தகமானது. செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 672 ரூபாயாக இருக்கிறது. அதேபோல ஐஆர்எப்சி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 111 ரூபாயாக இருக்கிறது.
இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நவரத்னா அந்தஸ்தை பெற்ற ஐஆர்சிடிசி, ஐஆர்எப்சி ஆகிய நிறுவனங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக மினிரத்னா, நவரத்னா, மகாரத்னா அந்தஸ்துகளை வழங்குகிறது. அந்த வகையில் நவரத்னா அந்தஸ்து என்பது பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய ஒரு கௌரவம் ஆகும். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் நிதி மற்றும் சந்தை செயல்திறன் ஆகியவற்றை அங்கீகரித்து நவரத்னா அந்தஸ்தை வழங்குகிறது.
நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டால் அந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் மதிப்பு இன்னும் உயரும். அதேபோல நவரத்தின அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் சில நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க முடியும். அதாவது இந்த நிறுவனங்கள் தங்களுடைய நிகர மதிப்பில் 15 சதவீதம் அல்லது 1000 கோடி ரூபாய் வரை மத்திய அரசின் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதற்கான சுதந்திரத்தை பெறுகின்றன.
நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் தங்களுக்கு கீழ் சுதந்திரமாக துணை நிறுவனங்களை உருவாக்கலாம் அல்லது மற்ற நிறுவனங்களோடு இணைந்து கூட்டு நிறுவனங்களை தொடங்க முடியும். பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் நிறுவனம் ஆகிய இரண்டும் நவரத்னா அந்தஸ்தை பெற்ற நிறுவனங்களாக இருக்கின்றன.
இந்தியாவில் பாரத் எலக்ட்ரிகல் லிமிடெட் நிறுவனம், கோல் இந்தியா லிமிடெட் , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை மகாரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனங்களாக இருக்கின்றன.
Story written by: Devika