ARTICLE AD BOX

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூன்றாவது மொழி கற்பது குறித்த விவகாரம் தற்போது தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக மாறி உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பாடமொழி மற்றும் தொடர்பு மொழி இல்லாமல் விருப்பமொழியாக மூன்றாவது மொழியை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தான் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஆனால் இந்தி மொழி கட்டாயம் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மக்கள் மத்தியில் திரித்து கூறுகிறார்கள்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் போடக்கூடிய இரட்டை வேடத்தை தொடர்ந்து நாங்கள் அம்பலப்படுத்துவோம். மும்மொழி கொள்கை தொடர்பான கூட்டத்தில் உணவு, சீருடை மற்றும் காலணி ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி கூறி இருந்தார். அவருடைய சொந்த பணத்திலிருந்து இது எதுவும் வழங்கப்படவில்லை. மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து தான் இது வழங்கப்படுகிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
துணை முதல்வர் பதவியில் இருந்து கொண்டு இது போன்று பொறுப்பின்றி பேசக்கூடாது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் குற்ற நிகழ்வுகள் அனைத்தும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். பெற்றோர்களும் குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கி அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.