ARTICLE AD BOX
TRB ராஜா: தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடு குஜராத்து-க்கு எப்படி போனது என எனக்குத் தெரியும்..?!
டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் பல தலைவர்கள் மத்தியில் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்துகொண்டு பேசினார். டிஆர்பி ராஜா தலைமையிலான குழு தான் தற்போது டாவோஸ் நகரில் நடக்கும் WEF கூட்டத்தின் மூலம் புதிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் மனிகண்ட்ரோல் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய போது, தமிழகத்தைத் தேடி வந்த முதலீடுகள் குறித்து தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அது இறுதியில் குஜராத் மாநிலத்திற்கு எப்படிச் சென்றதும் எனக்குத் தெரியும் என்றும் பேசினார். மத்திய அரசு குஜராத்தில் முதலீடுகளைக் கொண்டு வர அழுத்தம் கொடுப்பதாகக் கர்நாடக அமைச்சர்கள் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது இதே கருத்தை அமைச்சர் டிஆர்பி ராஜா-வும் முன்வைத்துள்ளார்.
புதிய முதலீடுகளைப் பெற மகாராஷ்டிராவும், தமிழ்நாடும் போட்டியிடுகின்றன என்றால், அது இறுதியில் இந்தியாவுக்குத் தான், இப்படியிருக்கும் வேளையில் குஜராத்தில் முதலீடு செய்ய வேண்டும் என மத்திய அரசு அழுத்தம் கொடுப்பது தவறு என்ற வகையில் பேசியுள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.
"முதலீடுகள் குஜராத்திற்குச் செல்வதில் மகிழ்ச்சி தான், ஆனால் அந்த முதலீடு அங்கு செழித்து வளர்வதை உறுதி செய்யுங்கள். புதிய முதலீடுகள் திறமையான ஊழியர்கள் அதிகம் இல்லாத இடத்தில் முதலீடு செய்ய வைத்து அதை வீணடிக்க வேண்டாம். நீங்கள் இந்த முதலீடு வேண்டும் எனச் சொல்லுங்கள், நாங்கள் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் நேரத்தை வீணடிக்க மாட்டோம் என அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் பேசினார்.
தமிழ்நாடு அரசு கல்வியிலும், இளைஞர்களின் திறமையை வளர்க்கும் பயிற்சியில் அதிகப்படியான முதலீட்டைச் செய்து வருகிறது. 'சீனா ப்ளஸ் ஒன்' உத்தி உருவானபோது இந்தியா தான் உலக நாடுகளுக்கு ஏற்ற இடமாக அனைவருக்கும் இருந்தது. அந்த மாற்றத்திற்குத் தமிழ்நாடு தயாராகிவிட்டது. எதிர்காலத்திற்கு எப்போதும் தயாராக இருப்பது எங்களுடைய பலம் என்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா இக்கூட்டத்தில் பேசினார்.
இதேபோல் தமிழ்நாடு ஒரே இரவில் SAAS தலைநகராக மாறவில்லை, இந்த நிலையை அடைய நாங்கள் எங்களை படிப்படியாக தயார்ப்படுத்தினோம். தமிழ்நாடு எப்போதும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க உலகளாவிய போக்குகளை கவனித்துக் கற்றுக்கொள்கிறோம், மாற்றங்களுக்கு ஏற்ப எங்களை மாற்றியமைத்துக்கொள்கிறோம். எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதுதான் தமிழ்நாடு எனவும் பேசியுள்ளார்.