ARTICLE AD BOX
சென்னை நிறுவனத்தை வாங்கிய டாடா குழுமம்.. சந்திரசேகரன் ஒரு முடிவோடு தான் இருக்கிறார் போலயே..!
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளரான டாடா எலக்ட்ரானிக்ஸ், கடந்த வாரம் ஆப்பிள் பொருட்களைத் தாண்டி பிற பிராண்டுகளுக்கும் ஸ்மார்ட்போன் முதல் அனைத்து கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரித்துக் கொடுக்கும் முக்கியமான முடிவை எடுத்தது. இதற்கு பெரும் உற்பத்தி கட்டமைப்பு வேண்டும் என்பதால் புதிதாக ஒரு நிறுவனத்தை டாடா வாங்கியுள்ளது.
சென்னையில் இருந்து இயங்கி வரும் பெகாட்ரான் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தில் சுமார் 60% பங்குகளை டாடா எலக்ட்ரானிக்ஸ் கையகப்படுத்தி தனது உற்பத்தி விரிவாக்கத்தில் அதிரடி காட்டியுள்ளது. இந்திய சந்தையில் அதிகரித்து வரும் எலக்ட்ரானிக்ஸ் தேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், சீனா + 1 கொள்கையில் இந்தியாவுக்கு வரும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆர்டர்களை மொத்தமாகக் கைப்பற்றும் இலக்குடனும் தனது உற்பத்தி கட்டமைப்பை விரிவாக்கம் செய்து வருகிறது டாடா எலக்ட்ரானிக்ஸ்.
பெகாட்ரான் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை டாடா கைப்பற்றிய நிலையில், பெகாட்ரானில் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட உள்ளது. இந்த மாற்றத்தில் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் நிர்வாகம் டாடா குழுமத்துடன் இணைக்கப்பட்டு, இதேநேரத்தில் அதிகபட்ச செயல் திறனையும் உறுதிப்படுத்த பெகாட்ரான் மற்றும் டாடா குழுமம் இணைந்து செயல்பட உள்ளது.
இப்புதிய கூட்டணியில் பெகாட்ரான் ரீபிராண்டிங் செய்யப்பட்டுத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு உயர்தர எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் என டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரான ரந்தீர் தாக்கூர், பெகாட்ரான் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது மூலம் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தியின் புதிய வளர்ச்சிப் பாதைக்குள் டாடா குழுமம் முன்னேறுவதை எளிதாக்கும் என்று தெரிவித்தார்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் சமீபத்தில் தான் கர்நாடக மாநிலத்தில் உள்ள நரசாபுரத்தில் விஸ்திரான் நிறுவனத்தின் இந்திய ஆப்ரேஷன்களை வாங்கியது. இந்த ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து வெறும் ஒரு வருடத்திற்குள் பெகாட்ரான் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை டாடா எலக்ட்ரானிக்ஸ் வாங்கியுள்ளது.
மேலும் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒன்பது புதிய தொழிற்சாலைகளை நிறுவும் திட்டத்தை அறிவித்துள்ளார். மேலும் டாடா குழுமம் இந்த மாபெரும் திட்டத்திற்காக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் பிரிவில் சுமார் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டையும் செய்ய உள்ளதாகச் சமீபத்தில் அறிவித்தார்.