ARTICLE AD BOX
ஜனவரி 31-ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்..! முழு விபரம் இதோ!
2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதியான சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக நடைபெறவுள்ளது. முதல் பகுதி ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறையினரிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார்.
அந்த வகையில் நிர்மலா சீதாராமன் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுடன் ஆலோசனைகளை முடித்துள்ளார். மோடி 3.0 அரசாங்கத்தின் இரண்டாவது முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் இது நிர்மலா சீதாராமனின் 8-வது பட்ஜெட்டாக இருக்கும்.
முக்கிய தேதிகள்: பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி அன்று தொடங்குவதால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கூடி, காலை 11 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். குடியரசுத் தலைவரின் உரை முடிந்த பிறகு சில மணி நேரத்தில் பொருளாதார ஆய்வறிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அடுத்த நாள் பிப்ரவரி 1-ஆம் அன்று நிர்மலா சீதாராமன் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
இந்திய நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன?: இந்தியத் தொழில்துறையினர் வரவிருக்கும் 2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சில அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர். இதில் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்திற்கான வரி குறைப்புகளும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஜிஎஸ்டி குறைப்புகளும் அடங்கும்.
அதோடு பல்வேறு துறை சார்ந்தவர்களும் வரிவிதிப்பை கருத்தில் கொள்ளக்கூடிய அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான டிடிஎஸ் விதிமுறைகளை தளர்த்துவது மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கான ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம் செய்வது ஆகியவை நாட்டிற்குள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டை அதிகரிக்கும் என்று கருதுகின்றனர்.
பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி வரவேறுக்கும் பட்ஜெட் இந்தியா அரசாங்கத்திற்கு பொருளாதார சவால்களை எதிர்கொள்ள ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மக்களுக்கு ஏற்ற அறிவிப்புகள் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.