ARTICLE AD BOX
சுட சுட பட்ஜெட் ரெடி.. ஹல்வா விழா உடன் பட்ஜெட் பணிகளை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன்..!
2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில், நிதியமைச்சக அலுவலகத்தில் வழக்கமாக நடைபெறும் "ஹல்வா விழா" வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் இந்த விழா பல ஆண்டுகளாக மத்திய நிதியமைச்சகம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். இந்த ஹல்வா விழா-வுக்கு பின்பு தான் லாக்-இன் காலம் துவங்கும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதியமைச்சகத்தின் உயரதிகாரிகள் மற்றும் பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய அம்சமாக நிதியமைச்சகத்தின் வடக்குத் வளாகத்தில் பெரிய அளவிலான அண்டாவில் ஹல்வா தயாரிக்கப்பட்டு நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்.
நிதியமைச்சர் வழக்கமாகப் பெரிய பாத்திரத்தில் ஹல்வாவை கிளறி அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பது மூலம் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும், அதன் பின்பு லாக்-இன் காலம் அறிவிக்கப்பட்டு பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படும். ஆனால் தற்போது டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் காரணத்தால் பிரிண்டிங் பணிகள் இல்லை.
இந்த லாக்இன் காலத்தில் பட்ஜெட் தயாரிப்பில் பணியாற்றி அனைத்து ஊழியர்களும் அமைச்சக வளாகத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும், இவர்கள் யாரும் வெளி உலகத்துடன் எந்தவொரு தொடர்பும் இருக்கக்கூடாது இதன் மூலம் பட்ஜெட் ஆவணங்களும், தரவுகளும் ரகசியமாகக் காக்கப்படும்.
1980 ஆம் ஆண்டு முதல், பட்ஜெட் ஆவணங்களின் அச்சுப்பணி நிதியமைச்சகத்தின் வடக்கு வளாகத்தில் பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள் அச்சிடப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டம் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார்.