ARTICLE AD BOX
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் கொடுத்த ஐடியா..!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை சவுதி அரேபியா நினைத்தால் உடனடியாக நிறுத்த முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துமே வீணாகின. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் டேவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சவுதி அரேபியா மற்றும் பிற எண்ணெய் வளம் கொண்ட ஓபெக் (OPEC) நாடுகள் கச்சா எண்ணெய் விலையை குறைத்தால் உடனடியாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும் என கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே சவுதி அரேபியா மற்றும் பிற எண்ணெய் வளமிக்க நாடுகள் கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் என நான் எதிர்பார்த்தேன் ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அந்த நாடுகள் அப்படி ஒரு நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆனால் சவுதி அரேபியா இந்த ஒரு முடிவை எடுத்தால் போர் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு சவுதி உள்ளிட்ட எண்ணெய் வள நாடுகளே பொறுப்பு என குறிப்பிட்டுள்ள அவர் போர் தொடரும் அளவுக்கு எண்ணெய் விலை அதிகமாகவே இருக்கிறது. எனவே நீங்கள் எண்ணெய் விலையை குறைத்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
இந்த போரால் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள டிரம்ப் கச்சா எண்ணெய் விலை குறையும் போது நான் மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களையும் உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.
இதன் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் தங்கள் வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்பு உள்ளது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பேசிய டொனால்ட் டிரம்ப் ரஷ்யா -உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உடனடியாக ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.
ரஷ்யா மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ரஷ்ய அதிபர் புதினுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது என தெரிவித்த டிரம்ப், ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக சரிவடைந்து வருகிறது இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதே அதற்கு ஒரு தீர்வாக அமையும் என தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோசியல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டது. இதுவரை 14 ஆயிரம் பேர் போரால் உயிரிழந்துள்ளனர் லட்சக்கணக்கானவர்கள் தங்களுடைய வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.
Story Written by: Devika