ARTICLE AD BOX
ஏன் தங்கத்துக்கு என்னாச்சு? ரூ.83,000-த்தை கடந்த தங்கம் விலை.. வரலாற்று உச்சத்தை எட்டியது..!
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றிய பின்பு பல நாடுகள் மீது அடுத்தடுத்து வரி விதித்த காரணத்தால் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுத்துள்ளது, இதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து 8-வது நாளாக உயர்ந்து வருகிறது. டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ 83,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட புதிய உச்சத்தை எட்டியது. ஜனவரி 4-ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்த அதிகரித்து வருகிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,555-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,242-க்கும் விற்பனையாகிறது.
ஆல் இந்தியா சரஃபா அசோசியேசனின் கூற்றுப்படி, 99.9% தூய்மையான தங்கம் இன்று 200 ரூபாய் அதிகரித்து, 10 கிராமுக்கு 83,100 ரூபாயை எட்டியது. நேற்றைய தினம் 10 கிராம் தங்கம் ரூ. 82,900-திற்க்கு விற்பனையானது.
உள்நாட்டு சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தங்கத்தின் தற்போதைய ஏற்றம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பாலும் மற்றும் பிற கொள்கைகளின் நிச்சயமற்ற தன்மை காரணமாக ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதுகாப்பான முதலீடாக கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர் என்று ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் சவுமில் காந்தி கூறியுள்ளார்.
தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து ரூ.94,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் 1 கிலோ வெள்ளி ரூ. 93,500 ரூபாயாக இருந்தது.
MCX சந்தையில், 10 கிராம் தங்கம் ரூ.334 அதிகரித்து ரூ.79,960 ஆக உயர்ந்தது, இன்ட்ராடேயில் 10 கிராமுக்கு ரூ.424 அதிகரித்து ரூ.80,050-ஆக உயர்ந்து சாதனை உச்சத்தை எட்டியது. ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் பிற திட்டங்கள் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியதால் எம்சிஎஸ் சந்தையில் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளதாக ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ரிசர்ச் அனாலிஸ்ட் தேவேயா காக்லானி கூறினார்.
அமெரிக்க டாலர் மதிப்பு மாற்றங்கள், பொருளாதார கொள்கை மாற்றங்கள் மற்றும் தங்க விலை மாற்றங்கள் போன்ற நிகழ்வுகள் இந்திய தங்க விலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கலாம். இதேவேளையில் ஜப்பான் மத்திய வங்கி இன்று தனது வட்டி விகிதத்தை 2008க்கு பின்பு அதிகப்படியாக 0.5 சதவீத அளவீட்டை எட்டியுள்ளது. இதன் மூலம் யென் கேரி டிரேட் பாதித்து பங்குச்சந்தை முதலீடுகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா டாலர் உலகளவில் பார்க்கும் போது முக்கியமான கரன்சியாக இருக்கும் காரணத்தால் இதன் மதிப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் முதலீட்டு சந்தையில் பெரிய அளவில் எதிரொலிக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தால் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் வாய்ப்புள்ளது. தங்கத்தை வாங்க வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது இந்திய ரூபாயில் அதிக தொகை செலவாகலாம். இதன் விளைவாக தங்கம் இந்தியாவில் உயரும்.
அதேபோல அமெரிக்காவில் பொருளாதாரம் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அது உலகளாவிய பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். உதாரணமாக அமெரிக்க வட்டி விகிதங்கள் அதிகரித்தால் மக்கள் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யத் தொடங்குவர் அல்லது வங்கிகளில் வழங்கப்படும் திட்டங்களை நாடுவர். அதுவே வட்டி விகிதம் குறைவாக இருந்தால் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தில் முதலீடு செய்வர். இதன் காரணமாகவும் தங்கம் விலை அதிகரிக்கும்.