ARTICLE AD BOX
LTIMindtree நிறுவனத்திற்கு புதிய சிஇஓ நியமனம்.. அட இவரா..!!
இந்திய ஐடி துறையில் 6வது பெரிய நிறுவனமாக தனக்கென தனி முத்திரை பதித்துள்ள எல்டிஐ மைண்ட்ரீ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை முன்னாள் மூத்த அதிகாரியான வேணுகோபால் லம்பு ஏற்கவுள்ளார். இது நிறுவனத்திற்கு ஒரு வகையில் வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. LTI மற்றும் Mindtree இணைப்பு இந்திய ஐடி சேவை துறையில் முக்கியமானதாக பார்க்கப்பட்டாலும் இக்கூட்டணி பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்யாமல் உள்ளது.
இப்படியிருக்கையில் தான் LTIMindtree-யின் தலைவராக இருந்த வேணுகோபால் லம்பு 2 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இந்நிறுவனத்திற்கு திரும்பியுள்ளார். இவரின் வருகை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.
உலகளாவிய சந்தைகளில் LTIMindtree நிறுவனத்தின் வெற்றிப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர் Venugopal Lambu, தற்போதைய சிஇஓ தேபஷிஸ் சட்டர்ஜி வருகிற நவம்பர் மாதம் பதவி காலம் முடியும் வேளையில், வேணுகோபால் லம்பு நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐடி துறை ஸ்டாஃபிங் நிறுவனமான ரேண்ட்ஸ்டாட்-ன் தொழில்நுட்பத் துறையை வழிநடத்தி வந்த வேணுகோபால் லம்பு, தற்போது LTIMindtree நிறுவனத்தின் சிஇஓ-ஆக உடனடியாக நியமனம் செய்யப்படுகிறார். இதன் மூலம், நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்கவுள்ளார். வேணுகோபால் லம்பு அடுத்த 5 வருடத்திற்கு சிஇஓ பதவியில் இருப்பார்.
LTIMindtree நிர்வாகம் புதிய சிஇஓ பதவிக்கு இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான நச்சிகேத் தேஷ்பாண்டே மற்றும் தலைவர் சுதிர் சதுர்வேதி ஆகியோரை பரிசீலித்து வந்தது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் நிறுவனத்தின் தலைவர் சுதீர் சதுர்வேதி திடீரென பதவி விலகியது நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதை தொடர்ந்து Venugopal Lambu புதிய சிஇஓ ஆக அறிவிக்கப்பட்டார்.
"டிசி" என்று அன்புடன் அழைக்கப்படும் தேபாஷிஸ் சட்டர்ஜி, லார்சன் & டூப்ரோவின் எல்&டி இன்ஃபோடெக் மற்றும் மைண்ட்ரீ ஆகிய முன்னணி ஐடி நிறுவனங்கள் இணைந்த பின்னர், 2022 ஆம் ஆண்டு நவம்பரில் எல்டிஐ மைண்ட்ரீயின் சிஇஓ ஆக பொறுப்பேற்றார்.
இந்த தலைமை மாற்றம், சமீபத்திய ஆண்டுகளில் இந்திய ஐடி துறையில் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களை போலவே உள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் டெக் மஹேந்திரா போன்ற முன்னணி நிறுவனங்களில் கடந்த 2 வருடத்தில் மூத்த அதிகாரிகள் அனைவரும் வெளியேறி போட்டி நிறுவனத்தில் முக்கிய பதவியில் அமர்ந்தனர்.