ARTICLE AD BOX
உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டர் நிறுவும் ரிலையன்ஸ்.. அதுவும் 'இந்த' இடத்தில்..!!
குஜராத்: முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டரை குஜராத்தில் அமைக்க இருப்பது தெரியவந்துள்ளது. ப்ளூம்பெர்க் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் குழுமம் உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டரை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமம் அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக டேட்டா சென்டர்களை அமைக்கும் பணியை ரிலையன்ஸ் குழுமம் தீவிர படுத்தியுள்ளது. தன்னுடைய டேட்டா சென்டருக்காக ரிலையன்ஸ் குழுமம் என்விடியா நிறுவனத்திடம் இருந்து செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செமி கண்டக்டர்களை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் ரிலையன்ஸ் மற்றும் என்விடியா நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டன. அப்போது என்விவிடியாவின் ஏஐ மாநாடு மும்பையில் நடைபெற்றது. அதில் முகேஷ் அம்பானியும் கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் குழுமம் கட்டமைக்கும் டேட்டா சென்டருக்கு என்விடியா நிறுவனம் பிளாக்வெல் ஏஐ பிராசஸர்களை வழங்க இருப்பதாக தெரிய வருகிறது.
அக்டோபர் மாதம் என்விடியா குழுமத்தின் ஏஐ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முகேஷ் அம்பானி இந்தியா இங்கிருந்து மாவை அனுப்பிவிட்டு ரொட்டியை இறக்குமதி செய்வது சரியாக இருக்குமா? என கேள்வி எழுப்பினார். அதாவது இந்தியா தனக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் தான் தயாரிக்க வேண்டும் என கூறினார்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக டிஜிட்டல் ரீதியிலான உள்கட்டமைப்பு கொண்ட சிறந்த நாடாக இந்தியா இருக்கிறது என அப்போது முகேஷ் அம்பானி தெரிவித்தார் . கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் குழுமம் மற்றும் என்விடியா குழுமம் இணைந்து இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைப்போம் என்றும் மிகப்பெரிய லாங்குவேஜ் மாடல்களை உருவாக்குவோம் என்றும் தெரிவித்திருந்தன.
மத்திய அரசு இந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறது. இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாயை செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவியாக வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது உலகளவில் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு டேட்டா சென்டர்கள் மிக முக்கியமானவை. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் டேட்டா சென்டர் அமைக்க முனைப்பு காட்டும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் அவற்றை முந்த திட்டமிட்டுள்ளது.
Story written by: Devika