ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று முக்கியமான லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக இரு அணிகளும், மோதிய ஆட்டத்தில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மேலும் பாகிஸ்தான் அணியில் பல சிக்கல்கள் நிலவுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹரபஜன்சிங், இப்படி ஒரு மோசமான பாகிஸ்தான் அணியை தாம் பார்த்ததே இல்லை என தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,"இப்படி ஒரு பாகிஸ்தான் அணியை நான் பார்த்ததே கிடையாது. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது எங்களுக்கு எப்போதுமே பாகிஸ்தான் நம்மை வீழ்த்தி விடுவார்களோ என்ற எண்ணம் இருக்கும். ஏனென்றால் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தார்கள்."
"ஆட்டத்தையே மாற்றக்கூடிய பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் விளையாடினார்கள். ஆனால் தற்போது இருக்கும் பாகிஸ்தான் அணியில் போட்டியை வெல்லக்கூடிய வீரர்கள் இருந்தாலும், அணியில் ஒற்றுமை இருப்பது போல் எனக்கு தெரியவில்லை. தற்போது இருக்கும் பாகிஸ்தான் அணியில் கூட தனி ஆளாக நின்று போட்டியை வெல்லக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்."
"ஆனால் ஒரு அணியில் ஏழு, எட்டு வீரர்கள் அப்படி இருந்தால் தான் உங்களால் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல முடியும். அப்படிப்பட்ட விஷயத்தை நான் பாகிஸ்தான் அணியில் பார்த்தது கிடையாது.இதுதான் என்னுடைய கருத்து. 2017 ஆம் ஆண்டு பகார் சமான் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடி இந்தியாவை வீழ்த்தினார்."
"ஆனால் அப்போது இருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இப்போதுள்ள பாகிஸ்தான் அணிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. நீங்கள் இரு அணிகளுமே நல்ல பேலன்ஸ் உடன் இருந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தானை தாண்டி இந்தியா சென்று விட்டது" என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜனின் இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட சையது அப்ரிடி, "90களில் இருந்த பாகிஸ்தான் அணியும் இப்போது உள்ள பாகிஸ்தான அணியும் ஒப்பிட்டே பார்க்க முடியாது. அப்போது இருந்த பாகிஸ்தான் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருந்தார்கள்.ஆனால் தற்போது யாரும் அப்படி இல்லை" என சையது ஆப்ரிடி கூறியுள்ளார்.