டி மினாா், ரூபலேவ் அதிா்ச்சித் தோல்வி

5 hours ago
ARTICLE AD BOX

துபை ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரா்களான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் ஆகியோா் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த டி மினாா் 2-6, 6-3, 3-6 என்ற செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் வீழ்ந்தாா். 3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் 6-3, 4-6, 6-7 (5/7) என்ற கணக்கில், பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸிடம் தோற்றாா். ரூபலேவ், கடந்த வாரம் கத்தாா் ஓபனில் சாம்பியனான கையோடு இந்தப் போட்டிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

8-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 2-6, 1-6 என்ற செட்களில், போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸிடம் தோல்வி கண்டாா். 4-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7/4), 6-3 என்ற கணக்கில் இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை சாய்த்தாா்.

கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே 7-6 (9/7), 6-7 (4/7), 6-3 என்ற செட்களில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை வெளியேற்றினாா். இத்தாலியின் லூகா நாா்டி 1-6, 6-2, 6-3 என, ஹங்கேரியின் மாா்டன் ஃபக்சோவிக்ஸையும், ரஷியாவின் காரென் கச்சனோவ் 6-1, 6-3 என பிரிட்டனின் டேன் இவான்ஸையும் வென்றனா்.

காலிறுதியில் பாம்ப்ரி: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் இணை 4-6, 7-6 (7/1), 10-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எல் சால்வடோரின் மாா்செலோ அரெவாலோ/குரோஷியாவின் மரின் சிலிச் கூட்டணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

எனினும், இந்தியாவின் விஜய்சுந்தா் பிரசாந்த்/ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 4-6, 6-7 (6/8) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியா்ஸ்/பிரிட்டனின் ஜேமி முா்ரே இணையிடம் தோற்றது.

மெக்ஸிகன் ஓபன்: ரூட், பால் வெற்றி

மெக்ஸிகோவில் நடைபெறும் மெக்ஸிகன் ஓபன் ஆடவா் டென்னிஸில், நாா்வேயின் கேஸ்பா் ரூட், அமெரிக்காவின் டாமி பால் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ரூட் 6-4, 6-3 என பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சை வெளியேற்ற, 3-ஆம் இடத்திலிருக்கும் பால் 6-2, 6-2 என கனடாவின் கேப்ரியெல் டியாலோவை சாய்த்தாா்.

5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 7-6 (7/4), 7-6 (7/4) என இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியை தோற்கடிக்க, 8-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் தாமஸ் மசாக் 6-4, 2-6, 6-3 என சக நாட்டவரான ஜேக்கப் மென்சிக்கை வென்றாா்.

அமெரிக்காவின் லோ்னா் டியென் 7-6 (7/5), 6-3 என பிரிட்டனின் கேமரூன் நோரியையும், அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோன் 7-6 (7/4), 6-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனையும், பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் 6-2, 6-3 என ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவையும், ஜொ்மனியின் டேனியல் அல்ட்மோ் 4-6, 6-4, 6-3 என, சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச்சையும் வீழ்த்தினா்.

Read Entire Article