IND vs NZ: `வருண் ஒரு ரெட் டிராகன்' - ஸ்பின்னர்களை வைத்து சண்டை செய்த இந்தியா; சரிந்த நியூசிலாந்து

16 hours ago
ARTICLE AD BOX

இந்தியா வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி துபாயில் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணியே முதலில் பேட் செய்து சுமாரான ஸ்கோரைத்தான் எடுத்தது. அந்த சுமாரான டார்கெட்டையும் எட்ட முடியாமல் இந்திய ஸ்பின்னர்களிடம் விக்கெட்டைக் கொடுத்து சரிந்து விழுந்திருக்கிறது நியூசிலாந்து.

டாஸ்

டாஸ்

டாஸை நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர்தான் வென்றிருந்தார். ஆனாலும் முதலில் பேட்டிங் ஆட வேண்டும் என்பதைத்தான் தானுமே விரும்பியதாக ரோஹித் கூறினார். முதல் இரண்டு போட்டிகளிலும் டார்கெட்டை சேஸ் செய்தோம். இந்தப் போட்டியில் எங்களை நாங்களே சவாலுக்குள் தள்ளிக்கொள்ள முதலில் பேட் செய்யவே விரும்பினோம் என ரோஹித் பேசியிருந்தார். ஹர்ஷித் ராணாவுக்கு பதில் வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் பேசியதைப் போலவே முதல் பேட்டிங் என்பது இந்தியாவுக்கு கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது.

கோலி

'டாப் ஆர்டர் சொதப்பல்!'

கில், ரோஹித், விராட் கோலி என இந்தியாவின் டாப் 3 வீரர்கள் மூவரும் பவர்ப்ளேக்குள்ளாகவே அவுட் ஆகிவிட்டனர். ரோஹித் பவுண்டரி சிக்சர் என துடிப்பாக இன்னிங்ஸை ஆரம்பிக்க இன்னொரு பக்கம் கில் மேட் ஹென்றி வீசிய 3 வது ஓவரிலேயே இரண்டு ரன்களில் lbw முறையில் அவுட் ஆகி சென்றார். ரோஹித் கேட்ச் ஆகி 11 ரன்களில் அவுட். மேட் ஹென்றி வீசிய அடுத்த ஓவரிலேயே கோலியும் அவுட். நல்ல லெந்த்தில் வந்த பந்தை பேக்வர்ட் பாய்ண்ட்டில் பவுண்டரியாக்க முயன்றார். ஆனால், க்ளென் பிலிப்ஸ் காற்றில் பறந்து அற்புதமாக கேட்ச்சை பிடித்தார். நல்ல ஷாட்டை ஆடியிம் பிலிப்ஸின் அபாரமான பீல்டிங்கால் கோலி 11 ரன்களில் அவுட் ஆனார். 'இவரெல்லாம் சர்க்கஸில் இருந்திருக்க வேண்டிய நபர்.' என வர்ணனையில் பிலிப்ஸை நகைச்சுவையாகப் பாராட்டினார் ரவி சாஸ்திரி.

'ஸ்ரேயாஸ் - அக்சர் கூட்டணி!'

பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அக்சர் படேலும் ஸ்ரேயாஷ் ஐயரும் இந்தியாவை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து 98 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். விக்கெட்டை காக்க ஆரம்பத்தில் இருவருமே நின்று நிதானமாக ஆடினர். 6.4 வது ஓவரில் இந்தியா கடைசியாக பவுண்டரி அடித்திருந்தது. அதன்பிறகு 51 பந்துகள் கழித்து சாண்ட்னரின் பந்தில் அக்சர் படேல் ஒரு பவுண்டரி அடித்தார். இங்கிருந்து இருவரும் கொஞ்சம் வேகம்பிடித்தனர். வில்லியம் ரூர்கி வீசிய அடுத்த ஓவரில் பின்னங்காலை ஊன்றி மூன்று பவுண்டரிகளை அடித்து அசத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனாலும் இந்த மிடில் ஓவர்கள் ஆடுவதற்கு கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.

ஸ்ரேயாஸ் - அக்சர்

'தடுமாற்றம்!'

சாண்ட்னர் திடீரென 75 கி.மீ வீசினார், திடீரென 95 கி.மீ இல் வீசினார். வேக மாறுபாடுகளோடு சரியான லெந்தை பிடித்து வீசிய பந்துகளில் இந்திய பேட்டர்கள் கொஞ்சம் சுணங்கினர். ஒரு கட்டத்தில் ரச்சின் ரவீந்திராவும் இவரோடு இணைந்தார். அவர் 90 கி.மீ க்கு மேல் வீச ஒரு பந்தை மடக்கி ஆட முற்பட்டு 42 ரன்களில் அக்சர் படேல் கேன் வில்லியம்ஸிடம் கேட்ச் ஆனார். ஸ்ரேயாஸ் ஐயர் இதன்பிறகும் நின்று ஆடினார். ரூர்கி, ரச்சின் ரவீந்திரா போன்றோரின் பந்தில் சிக்சர்களை பறக்கவிட்டார். அரைசதத்தை கடந்தார். நின்று ஆடி சதத்தை எட்டுவார் என நினைக்கையில் ரூர்கியின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று 79 ரன்களில் வில் யங்கிடம் கேட்ச் ஆனார். இந்த சமயத்தில் அடுத்தடுத்து விக்கெட்டும் விழுந்தது. கே.எல்.ராகுல் 23 ரன்களில் சாண்ட்னரின் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் டாம் லேதமிடம் கேட்ச் ஆனார். ஜடேஜா மேட் ஹென்றியின் பந்தில் 16 ரன்களில் அவுட். 250 ரன்களை எட்டுவதே சிரமம் என தோன்றியது.

'ஹர்திக் கேமியோ!'

இந்த சமயத்தில்தான் ஹர்திக் பாண்ட்யா மதிப்புமிக்க கேமியோவை ஆடினார். 49 வது ஓவரில் மட்டும் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 15 ரன்களை சேர்த்தார். 45 ரன்களை மொத்தமாக அடித்திருந்தார். கடைசி ஓவரில் இன்னும் வேகமாக ஆடி ரன் எடுப்பார் என எதிர்பார்க்கையில் மேட் ஹென்றியின் பந்தில் ரச்சினிடம் கேட்ச் ஆனார். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை எடுத்திருந்தது. மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்தியா

'பௌலர்களுக்கு சவால்!'

இதுவரை ஆடியிருக்கும் 3 போட்டிகளில் இந்தப் போட்டியில்தான் இந்திய அணி ரொம்பவே சுமாராக பேட்டிங் ஆடியிருந்தது. பௌலர்களுக்கு பெரிய சவால் காத்திருந்தது. ஆனால், முதல் 10 ஓவர்களில் மட்டுமே நியூசிலாந்து கொஞ்சம் சவால் கொடுத்தது. முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி 49 ரன்களுக்கு ஒரே ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. மோசமில்லாத ஆட்டம். ஷமியும் ஹர்திக்கும்தான் முதல் ஸ்பெல்லை வீசியிருந்தார்கள். ஹர்திக் அவர் வீசிய இரண்டாவது ஓவரிலேயே ரச்சினின் விக்கெட்டை வீழ்த்தினார். சரியாக டீப் தேர்ட் மேன் பீல்டரை தேடி கேட்ச்சை கொடுத்து ரச்சின் வெளியேறினார். இதன்பிறகு கொஞ்ச நேரத்துக்கு விக்கெட்டே விடாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆடினர்.

ஸ்பின்னர்ஸ்

'இழுத்துப் பிடித்த ஸ்பின்னர்கள்!'

ஸ்பின்னர்கள் வந்தவுடன் நிலைமை மாறியது. இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. குறிப்பாக, 11-20 இந்த 10 ஓவர்களில் நியூசிலாந்தின் ரன்ரேட் 3.60 தான். இந்திய ஸ்பின்னர்கள் இழுத்துப் பிடித்து விட்டார்கள். வில் யங்கை ஒரு ஸ்பீடான கூக்ளியில் வருண் போல்டாக்கியிருந்தார். இதன்பிறகு டேரில் மிட்செலும் வில்லியம்சனும் கூட்டணி சேர்ந்தனர். கூட்டாக விக்கெட்டை விட்டு விடக் கூடாது என்பதில் குறியாக இருந்த கூட்டணி தற்காப்பு ஆட்டத்தை ஆடியது. வில்லியம்சன் மற்றுமொரு க்ளாஸான ஆட்டத்தை ஆடினார். பீல்டர்களுக்கு இடையேயான தூரத்தை கணக்கிட்டு சரியாக கணித்து ஷாட்களை ஆடினார். ஆனாலும் இந்த கூட்டணி அபாயகரமானதாக மாறவில்லை. குல்தீப் யாதவ்வின் பந்தில் 17 ரன்களில் டேரில் மிட்செல் அவுட் ஆனார். இதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது.

'வருண் சக்கரவர்த்தி மேஜிக்!'

9 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் நியூசிலாந்து இழந்திருந்தது. இந்த 9 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகள் lbw அல்லது போல்ட் முறையில் வந்திருந்தது. எனில், இந்திய ஸ்பின்னர்கள் அத்தனை டைட்டான லைன் & லெந்த்தில் வீசினார்கள் என புரிந்துகொள்ளலாம். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதே துபாய் மைதானத்தில்தான் 2021 இல் அவரது கரியர் ஆரம்பிப்பதற்குள் முடிந்திருந்தது. ஐ.பி.எல் லிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு கம்பேக் கொடுத்தார். சிறப்பாக ஆடி அணியில் இடத்தை தக்கவைத்தார். சாம்பியன்ஸ் டிராபிக்கும் தேர்வு செய்யப்பட்டார். இங்கே அவர் முதல் சாய்ஸாக கருதப்படவில்லை. வாய்ப்புக்காக காத்திருந்தார். வாய்ப்பு கிடைத்தவுடன் முதல் போட்டியிலேயே 5 விக்கெட் ஹால். இத்தனைக்கும் நியூசிலாந்து அணிதான் இந்தத் தொடரில் வேறெந்த அணியை விடவும் மிகச்சிறப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொண்டது. அப்படிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்து நின்று வில்லியம்சனுக்கு எந்த ஆதரவும் கிடைக்காமல் செய்துவிட்டார்.

வருண் சக்கரவர்த்தி

'இந்தியா வெற்றி!'

அக்சரும் குல்தீப்பும் கூட சிறப்பாக வீசியிருந்தனர். ஒற்றை ஆளாக நின்று ஆடிய வில்லியம்சனை அக்சர் படேல் தன்னுடைய ஸ்பெல்லின் கடைசி பந்தில் வீழ்த்தினார். 81 ரன்களில் க்ரீஸை விட்டு இறங்கி பெரிய ஷாட்டுக்கு முயன்று வில்லியம்சன் ஸ்டம்பிங் ஆனார். அத்தோடு நியூசிலாந்தின் நம்பிக்கையும் ஒடிந்தது.

45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் ஆக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நாளை மறுநாள் நடக்கவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது.

Read Entire Article