ARTICLE AD BOX
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம்புதூரில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணகுமார் - சங்கீதா தம்பதியினர், சங்கீதா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி புரிந்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவர் கிருஷ்ணகுமாருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. தனது மனைவியின் மீது சந்தேகம் அடைந்து தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளது. இன்று காலை இரண்டு பேரும் பள்ளிக்கு சென்ற பிறகு கிருஷ்ணகுமாருக்கும் - சங்கீதாவிற்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சங்கீதாவை கிருஷ்ணகுமார் சுட்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே சங்கீதா இறந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே தனது சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வண்டாழி ஈரட்டுகுளம் என்ற இடத்திற்கு கிருஷ்ணகுமார் சென்றுள்ளார். அங்கு தனது வீட்டின் முன்பாக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்ட போலீசாரும் கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவர் ஒருவருடன் சங்கீதா தவறான உறவில் இருந்ததாக கிருஷ்ணகுமார் சந்தேகித்ததாகவும்,
இது குறித்து இருவருக்கும் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர் கேட்காததால் ஆத்திரமடைந்து சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு கிருஷ்ணகுமார் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. திருமணம் கடந்த உறவு காரணமாக மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விட்டு கணவன், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.