ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் கண்ணை மூடிக்கொண்டு விராட் கோலி என்றே சொல்லலாம். ஆனால், அவரைத் தாண்டி மேலும் நான்கு விஷயங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.
சேஸ் மாஸ்டர் என அழைக்கப்படும் விராட் கோலி மிக கவனமாக ஆஸ்திரேலியா நிர்ணயித்த 265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணியை அழைத்துச் சென்றார். அவர் 84 ரன்கள் சேர்த்தார். ஆனால், இதைத் தவிர்த்து இந்திய அணி செய்த சில முக்கியமான விஷயங்களும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அணித் தேர்வு, ரோஹித்தின் துல்லியமான கேப்டன்சி நகர்வு ஒன்று, பந்துவீச்சாளர்களின் கூட்டு முயற்சி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த இரண்டு சம்பவங்கள் தான் அந்த நான்கு விஷயங்கள்.

அணித் தேர்வு:
எந்த ஒரு அணியும் துபாய் போன்ற சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாகவே இருந்தாலும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்யாது. மூன்று முழு நேர சுழற் பந்துவீச்சாளர்களுடன் பேட்ஸ்மேன்கள் யாரேனும் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராக செயல்படுவார்கள். ஆனால், இந்திய அணி பேட்டிங் செய்யும் திறனுடைய இரண்டு முழு நேர சுழற் பந்துவீச்சாளர்களையும் (அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா) மேலும் பேட்டிங் திறன் குறைவாக உள்ள இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களையும் (குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி) களமிறக்கியது. இந்த அரையிறுதி போட்டிக்கு முன் நியூசிலாந்து போட்டியிலேயே இதற்கான முன்னோட்டத்தையும் செயல்படுத்தி அந்த பரிசோதனையில் வெற்றியையும் அடைந்தது இந்திய அணி.
பவுலர்களின் கூட்டு முயற்சி:
இந்திய அணி இதைத்தான் செய்யப்போகிறது என்பதை ஊகித்து ஆஸ்திரேலிய அணியும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களுடன் ஆடியது. ஆனால் அங்குதான் விஷயமே உள்ளது. இந்திய அணியின் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களும் பத்து ஓவர்கள் முழுமையாக வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள். ஆனால் ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா மற்றும் தன்வீர் சங்காவை தவிர மற்றவர்கள் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்கள் தான். எதிர்பார்த்தது போலவே இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர். மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது ஷமி மறுபுறம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. அரண்டு போன ஆஸ்திரேலியா.. சேஸிங் ரெக்கார்டை உடைத்த இந்திய அணி
ரோஹித்தின் பவுலிங் சுழற்சி:
அடுத்து இந்த வெற்றிக்கு ரோஹித் சர்மாவின் கேப்டன்சி முக்கிய காரணமாகும். அவர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது பந்துவீச்சாளர்களை மாற்றியதில் திட்டமிட்டு செயல்பட்டார். எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பந்துவீச்சாளரை பந்து வீச வைக்க வேண்டும் என்பதில் அவரது திட்டம் மிகத் தெளிவாக இருந்தது. அதன் காரணமாகவே டிராவிஸ் ஹெட் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் வீழ்ந்தார். பவர் பிளேவில் வருண் சக்கரவர்த்தியை பந்து வீச வைத்தது ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். இது ஒரு உதாரணம் மட்டுமே.
ஸ்ரேயாஸ் செய்த சம்பவங்கள்:
அடுத்து இந்த வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணமாக ஸ்ரேயாஸ் ஐயரை சொல்லியே ஆக வேண்டும். அவர் இந்திய அணி இரண்டு விக்கெட் விழுந்த பின் விராட் கோலியுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்க்க காரணமாக இருந்தார். அவர் 45 ரன்கள் சேர்த்தது மட்டும் இன்றி அவர் செய்த ஒரு ரன் அவுட் திருப்புமுனையாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணி மேலும் 15 அல்லது 20 ரன்கள் சேர்ப்பதை அந்த ரன் அவுட் தடுத்தது.
அலெக்ஸ் கேரி 48வது ஓவரின்போது ஸ்ரேயாஸ் ஐயரால் ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது அவர் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி மூன்று ஓவர்களில் அலெக்ஸ் கேரி நின்று இருந்தால் நிச்சயமாக ஆஸ்திரேலியா அணி கூடுதலாக ரன் சேர்த்திருக்கும். அதை ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ஃபீல்டராக தடுத்தார்.
விராட் கோலியின் சேஸிங், இந்திய அணி நிர்வாகத்தின் அணித்தேர்வு, ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங், இந்திய பந்துவீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவையே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.